உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாகனங்களால் இடையூறு; மூடப்பட்ட பியர் சோலை அருவி; பிரச்னைகளின் பிடியில் கொடை 4வது வார்டு

வாகனங்களால் இடையூறு; மூடப்பட்ட பியர் சோலை அருவி; பிரச்னைகளின் பிடியில் கொடை 4வது வார்டு

கொடைக்கானல் : ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு,முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட பியர் சோலை அருவி,பட்டா வழங்காததால் தவிக்கும் மக்கள் என பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 4வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.ஆன்மிக தலங்கள், தனியார் விடுதிகள் , கரடிச்சோலை அருவி, கல்லுக்குழி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பட்டா இல்லாமலே மக்கள் குடியிருந்து வருகின்றனர். காட்டுமாடு நடமாட்டம் அதிகம் உள்ளதால் மக்கள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை உள்ளது. இதோடு குரங்குகள் தொல்லையும் உள்ளதால் மக்கள் படாதபாடு படுகின்றனர். வார்டில் பொது கழிப்பறை வசதி அறவே இல்லை . இதனால் திறந்த வெளியை நாடும் அவலம் தொடர்கிறது . கஞ்சா, போதை பொருட்கள் பயன்படுத்துவர்களால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதை கட்டுப்படுத்த போலீசார் அவ்வப்போது கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

பியர்சோலை அருவி மூடல்

இன்பராஜ் , தொழிலாளி: இங்குள்ள பிரசித்தி பெற்ற பியர்சோலை அருவி கொரோனாவிற்கு பின் வனத்துறையால் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மீண்டும் இந்த அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும். வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சமூக விரோத செயல்களை கண்டறிய வேண்டும். தெருக்களில் நடமாடும் காட்டுமாடுகளால் நடமாடுவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

வாகனங்களால் இடையூறு

அந்தோணி, தொழிலாளி: குரங்குகள் தொல்லையால் குடியிருப்போர் அவதிப்படும் நிலை உள்ளது. குறுகிய தெரு ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது. லாயிட்ஸ் ரோடு பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. வார்டில் சமூக விரோத செயல்களை தடுக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.வீடுகளில் முன் நிறுத்தப்படும் டூவீலர்களில் பெட்ரோல் திருடு போகிறது. மேலும் டயர்களில் ஆணியை குத்திவிட்டு செல்கின்றனர். மாரியம்மன் கோயில் பகுதியில் பொதுக் குழாய் அமைப்பது அவசியமாகிறது .

நெரிசலால் அவதி

அந்தோணி கிறிஸ்டி, தொழிலாளி : முக்கிய ரோடுகளில் தனியார் லாரிகள் பார்க்கிங் செய்வதால் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. நாயுடுபுரம் டிப்போ பகுதியில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கின்றனர். இதை ஒழுங்குபடுத்தி சீரமைக்க வேண்டும். ரோட்டோரங்களில் கட்டுமான பொருட்கள் குவிப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைகளுக்கு தீர்வு

நித்யா, கவுன்சிலர் (அ.தி.மு.க.): ரூ. 2 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. சமூக விரோத செயல்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் . குரங்கு, காட்டுமாடு நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டோர இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த நகராட்சி, போலீசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும். பியர் சோலை அருவியை திறக்க வனத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்களை கண்டறிய போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை