உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்வி உதவி, இயலாதோருக்கு உணவுகள்

கல்வி உதவி, இயலாதோருக்கு உணவுகள்

திண்டுக்கல் : படிக்கும் மாணவர்களுக்கு கல்விசேவை,முதியோர்,ஊனமுற்றோருக்கு அன்னதானம் என தானம் செய்வதில் வள்ளலார் வழியை 75 ஆண்டுகளாக பின்பற்றி மக்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் திண்டுக்கல் மலையடிவாரம் அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தினர். சேவைகள் செய்வதையே இலக்காக வைத்து செயல்படும் இவர்கள் கூறியதாவது...

உதவி செய்வது நோக்கம்

சந்திரன், தலைவர், திண்டுக்கல்: சங்கம் ஆரம்பித்து 75 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு தினமும் காலையில் 50 ஏழை மக்களுக்கு மூலிகை கஞ்சி வழங்குகிறோம். 13 ஆண்டுகளாக ஊனமுற்றோர், முதியோர்கள் என 145 பேருக்கு தினமும் மதியம் சாப்பாடு கொடுக்கிறோம். வள்ளலார் வழியை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். வடலுாரில் எப்படி இருக்கிறதோ அதை அமைப்பு தான் திண்டுக்கல்லிலும் உள்ளது. கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்கு மாலை நேரத்தில் டியூஷன் நடத்துகிறோம். இதிலும் 100 மாணவர்கள் படிக்கின்றனர். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதால் அதை நாங்கள் அர்ப்பணிப்போடு செய்து வருகிறோம். உதவி செய்வதை தான் வள்ளலார் போதனையாக வழங்கி உள்ளார் .அதே வழியில் தொடர்ந்து பயணிக்க உள்ளோம்.

மனநிறைவு இருக்கும்

ராமலிங்கம், செயலாளர், திண்டுக்கல்: ஆங்கில மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. மன அமைதிக்காக ஏராளமான மக்கள் பங்கேற்று நலம்பெறுகின்றனர். வள்ளலாரின் கருத்துக்கள் உதவி செய்வதை மையமாக கொண்டது. 1948ல் எங்கள் சங்கத்தை சுத்தானந்தபாரதி,முத்துராமலிங்க தேவர் தொடங்கினர். சுந்தரம்பிள்ளை நிலம் வழங்கினார். இல்லாதவர்களுக்கு உதவி செய்வது நல்ல பண்பாக கருதப்படுகிறது. எங்கள் சங்கத்தின் மூலம் அதை செய்கிறோம். உதவி செய்வது ஒரு மனிதனுக்கு மனநிறைவை ஏற்படுத்தும்.

மார்கழியில் வழிபாடு

மோகனவேல், பொருளாளர், அறிவுத்திருக்கோயில், திண்டுக்கல்: மது,மாது, கொலை, கொள்ளை, பொய் போன்ற 5 கொடிய செயல்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக வள்ளலார் போராடினார். இதற்காக நல்ல பண்புகளை சாமானிய மக்களுக்கு கொண்டு செல்வதற்காக அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகளாக மக்கள் சேவையில் உள்ளது. இங்கு ஜீவ காருண்ய ஒழுக்கம், பரோபகரம் என்ற இரண்டையும் மையமாக கொண்டு மார்கழி மாதம் முழுவதும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

ஒழுக்கங்களை அறிய வேண்டும்

ரவி, ஸ்ரீவாசவி தங்கமாளிகை உரிமையாளர், திண்டுக்கல்: வள்ளலாரின் கொள்கைகள் திண்டுக்கல் மக்கள் மத்தியில் செல்வதற்காக இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இங்கு தியானம் செய்ய வருவோர் நிம்மதியுடன் தங்கள் பிரச்னைகள் தீர்ந்து வீடுகளுக்கு செல்கின்றனர். இறை உணர்வு கிடைப்பதையும் உணரமுடியும். சுத்த சன்மார்க்க ஒழுக்கமாகிய இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் போன்றவற்றை மக்கள் அறிந்து கொண்டு நடக்க வேண்டும்.

கல்வி வழங்குகிறோம்

சிவராம், சுபம் பேட்ரிக்ஸ், திண்டுக்கல்: இந்த சங்கத்தின் மூலம் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. வள்ளலாரை மையமாக கொண்டு இங்கு வாழ்ந்த சுவாமி சரவணானந்தா பல நுால்களையும் வெயிட்டுள்ளார். பள்ளிப்பாடத்திட்டங்களில் வள்ளலார் குறித்த விபரங்களை சேர்க்க வேண்டும். இங்கு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்துவோம். அனைவருக்கும் வள்ளலார் குறித்த வரலாறுகள் போய் சேர வேண்டும் என்பதே எங்களின் கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !