| ADDED : ஜூலை 22, 2024 05:42 AM
மாவட்டத்தில் நத்தம்,வத்தலகுண்டு,கொடைக்கானல்,ஆத்துார் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள பகுதிகளில் ரோடுகள் அனைத்தும், சி.ஆர்.ஐ.டி.பி., திட்டம் சாரா பணிகள், சாலை பாதுகாப்பு பணிகள்,வெள்ள நிவாரண பணிகள் ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்படுகின்றன. இவற்றை கோட்டத்தில் உள்ள 35 சாலை ஆய்வாளர்கள், 183 சாலை பணியாளர்கள் கவனிக்கின்றனர்.160 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் 485 கி.மீ., மாவட்ட இதர சாலைகள் 505 கி.மீ., கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் 35 கி.மீ., என, சுமார் ஆயிரத்து 180 கிலோமீட்டர் துார ரோடுகள், நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளன. இவை தவிர உள்ளாட்சி அமைப்புகளின் வசமும் கணிசமான அளவில் ரோடுகள் உள்ளன. சீரமைப்பு பராமரிப்பிற்கென பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடு தொடர்ந்த போதும் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு இடங்களில் பராமரிப்பு கண்டுகொள்ளப்படுவது இல்லை. ரோட்டோர மரங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. விரிசல்களுடனும், அடிப்பகுதி சேதமடைந்தும் உள்ள விபத்து அபாய ரோட்டோர மரங்களை நெடுஞ்சாலை துறை அப்புறப்படுத்த வேண்டும். குக்கிராமங்கள் உள்பட ரோட்டின் இருபுறமும், பெரும்பாலான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சில மரங்கள் நடுப்பகுதியில் விரிசல்களுடனும், அடிப்பகுதி அரிக்கப்பட்டு சேதமடைந்த நிலையிலும் உள்ளன. மரங்கள் மட்டுமின்றி தாழ்வான நிலையில் உள்ள மின் ஒயர்கள், சேதமடைந்த தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இவற்றை சீரமைக்கவோ, அப்புறப்படுத்துவோ நடவடிக்கை எடுப்பதில் தொய்வு நிலவுகிறது. தற்போது ஆடிமாதம் துவங்கி காற்று வேகமாக வீசுகிறது. இந்த சமயத்தில் ஏதாவது அசாம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.