| ADDED : ஆக 20, 2024 04:49 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., முருகப்பெருமாளை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி ராஜபாண்டி உட்பட 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் 40. பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் நேற்று காலை 6:30 மணிக்கு ஈடுபட்டிருந்தார். வைகை அணை ரோட்டில் இருந்து ஜெயமங்கலம் நோக்கி வந்த ஆட்டோவும், ஆட்டோவின் பின்னால் வந்த டூவீலரையும் சோதனை செய்தனர்.இதில் ஆட்டோவை ஓட்டி வந்த ஜெயமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி 23, நண்பர் சூர்யா 22, டூவீலரில் வந்த நிதீஷ் 19, ஆதி 21, ஆகிய நால்வர் போலீசாரை அவதுாறாக பேசினர். இதில் ராஜபாண்டி ஆட்டோவில் இருந்த அரிவாளால், முருகப்பெருமாளை வெட்ட முயற்சித்தார். போலீசார் ராஜபாண்டியை பிடித்துக் கொண்டனர். சூர்யா, நிதீஷ், ஆதி ஆகியோர் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டினர்.நான்கு பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஜெயமங்கலம் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து அரிவாள், வாள்கத்தி, ஆட்டோ, டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 4 பேரும் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது பெட்டிக்கடையை உடைத்து சிகரெட், பணம் திருடியுள்ளனர்.