| ADDED : ஜூன் 25, 2024 06:27 AM
வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றியத்தில் மாணவர்களே இல்லாமல் இரு அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அரசின் நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல் 10 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் சில பள்ளிகள் உள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளது.வேடசந்துார் ஒன்றியத்தில் அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகள் என 96 பள்ளிகள் உள்ளன. மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, காலணி உள்ளிட்ட 14 வகையான உதவிகள், காலை,மதிய உணவு திட்டமும் உள்ளது. இவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் சமீப காலமாக மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுகிறது. நாகம்பட்டி ஊராட்சி லகுவனம்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை தினமும் பள்ளியை திறந்து மாலை வரை உட்கார்ந்து விட்டு செல்கிறார். கல்வார்பட்டி ஊராட்சி ராஜாகவுண்டன் வலசு அரசு துவக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இருவர் உள்ளனர். இதில் உதவி ஆசிரியர் மாற்றுப் பணியில் உள்ளார். இங்கும் பள்ளி தினமும் திறந்து மூடப்படுகிறது. பாலப்பட்டி ஊராட்சி கூத்தாங்கல்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே உள்ளர். மற்றொரு மாணவர் விடுமுறை என்றனர். இங்கு இரு ஆசிரியர்கள், சமையலர் உள்ளனர். ஒரு ஆசிரியர் மாற்றுப் பணியில் உள்ளார். வேடசந்துார் ஒன்றியத்தில் இதே போன்ற ஒற்றை இலக்க எண்ணிக்கையில்பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் உள்ளனர்.மாவட்ட கல்வித்துறை நிர்வாகம், மாணவர்களே இல்லாத அரசு பள்ளிகளில் ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தி மாணவர்களை சேர்க்கையை அதிகரிக்க முன் வர வேண்டும்.அது முடியாத காரியம் என்றால் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மாணவர்கள் உள்ள பள்ளிகளுடன் இணைக்க மெர்ஜ்) வேண்டும்.மாணவர்களே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களை உட்கார வைத்து அவர்களின் செயல்பாட்டை, திறமையை முடக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் அரசு நிதியும் பல்வேறு விதமாக வீணடிக்கப்படுகிறது என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.