| ADDED : மே 05, 2024 04:42 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டைல் என்கிற போர்வையில் குளறுபடியாக நம்பர்களை பதித்துள்ளனர். நியூமராலஜி படியாக தனக்கு பிடித்த ராசியான எண்களை மட்டும் பெரிய அளவில் காட்டி மற்ற எண்களை சிறிய அளவில் கண்ணுக்கு தெரியாதபடி ஸ்டிக்கர்களாக நம்பர் பிளேட்களில் ஒட்டும் போக்கு பரவலாகி உள்ளது. சட்டத்தை காக்கும் வழக்கறிஞர்கள் முதல் பத்திரிகையாளர்கள் ,போலீஸ் , தனியார், அரசு துறை அலுவலர்கள் அரசியல், சினிமா ரசிகர்கள் வரை சிறிய வடிவிலான நம்பர் பிளேட்டிலே தங்கள் தொழில் ரீதியாகவும், போட்டோ ஸ்டிக்கர்களை ஒட்டி வலம் வருவது விளம்பர வாகனம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையும் தாண்டி இளைஞர்கள் பலர் நம்பர் பிளேட்டில் தங்களது வாழ்க்கையின் காதல் அனுபவ தத்துவத்தை ஒட்டியபடி வலம் வருகின்றனர். இதை படிக்கும் நோக்கத்தில் பின்னால் அணிவகுத்து வரும் வாகனங்கள் விபத்திலும் சிக்கும் நிலையும் உருவாகிறது. நம்பர் பிளேட்டில் உள்ள கண்ணில் தெரியாத எண்களால் விபத்து நடந்தாலும் எளிதில் தப்பி செல்கின்றனர். திருட்டு ,வழிபறிகளில் ஈடுபடுவோரும் எளிதில் தப்பும் நிலை உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வாகன நம்பர் பிளேட்டை முறைப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களும் ,போக்குவரத்து போலீசாரும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.