அடிப்படை வசதியின்றி தவிக்கும் நாகம்பட்டி
வேடசந்துார்: நாகம்பட்டி ஊராட்சியில் முறையான ரோடு வசதி, குடிநீர் வசதி இன்றி மக்கள் அவதிப்படும் நிலையில் தோப்புப்பட்டி தெற்கு தெரு மக்களுக்கு ஓட்டுச்சீட்டு, ஆதார் என அனைத்தும் அருகில் உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ளது. இதனால் மக்கள் சிமென்ட் ரோடு, தெரு விளக்கு வசதி இன்றி இருளில் அவதிப்படுகின்றனர். தற்போது ஊராட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகம்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, லவுகணம்பட்டி, குன்னம்பட்டி, ஓட்டநாகம்பட்டி, கொன்னாம்பட்டி, தம்மனம்பட்டி உள்ளிட்ட 23 கிராமங்களை உள்ளடக்கிய நாகம்பட்டி ஊராட்சியில் வேடசந்துார் திண்டுக்கல் மெயின் ரோட்டிலிருந்து மேற்கு நோக்கி பிரிந்து செல்லும் நாகம்பட்டி ரோடு, போக்குவரத்து நிறைந்த நிலையில் தற்போது சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளி கல்லுாரி, நுாற்பாலை, நகர் பகுதிக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். பிரிவின் நுழைவுப் பகுதியில் உள்ள நாகம்பட்டி காலனிக்கான குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதமடைந்துள்ளது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகே செல்லும் வாய்க்காலை துார்வாரும்போது குடிநீருக்கு செல்லும் பைப் லைனை உடைத்து விட்டனர். இதனால் இரண்டு மூன்று நாட்களாக இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ரோட்டில் இருந்து பெரியகுளம் அருகே பிரிந்து செல்லும் நாகம்பட்டி ரோடும் சேதமடைந்துள்ளது. இங்கு குழாய் பாலம் சேதமடைந்ததால் முறையான ரோடு வசதி , பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முறைப்படுத்த வேண்டும்
நாச்சிமுத்து, நிர்வாகி, பசியில்லா வேடசந்துார், நாகம்பட்டி: வேடசந்துார் திண்டுக்கல் ரோட்டில் இருந்து நாகம்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டை முதலில் புதுப்பிக்க வேண்டும். நாகம்பட்டியில் 600 வீடுகள் உள்ள நிலையில் பொது கழிப்பறை, குளியலறை வசதி ஏற்படுத்தப்பட்டும் போதிய பயன்பாடின்றி உள்ளது. முறையான சாக்கடை, சிமென்ட் ரோடு வசதிகள் இல்லை. இவற்றை நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும். 15 ஆண்டுக்கு மேலாக சேதம்
பி.தங்கவேல், சமூக ஆர்வலர், நாகம்பட்டி: வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் பெரியகுளம் அருகே நாகம்பட்டி செல்லும் தார் ரோடு செல்கிறது. இந்த ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்துள்ளது. இந்த ரோட்டில் சிற்றோடை ஒன்று குறுக்கிடுவதால் அங்கு முறையான குழாய் பாலம் அமைக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வரும் நுாற்பாலை வாகனங்கள் ஆத்து மேடு சென்று திண்டுக்கல் ரோட்டில் செல்லாமல் இந்த ரோட்டில் குறுக்கு வழியில் சென்று மீண்டும் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் செல்வதால் போக்குவரத்து கூடுதலாக உள்ளது. இதை கருதி நெடுஞ்சாலையில் சப்வே அமைக்க வேண்டும். காவிரி குடிநீர் சப்ளை இல்லை
பி.காளிமுத்து, எர்த் மூவர் டிரைவர், பொன்னழகு நகர்: எல்லை காளியம்மன் கோயில் அருகே பொன் அழகு நகர் உருவாகி நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது 40 வீடுகள் உள்ளன. ஆனால் ரோடு வசதி, சாக்கடை, தெரு விளக்கு வசதிகள் முழுமை பெறவில்லை. முறையான காவிரி குடிநீர் விநியோகம் இல்லை. நகர் பகுதியை ஒட்டி இருந்தும் கிராமப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகள் கூட இந்த ஊராட்சி பகுதியில் கிடைக்கவில்லை . எந்த வசதியும் இல்லை
பி.மரகதமணி, குடும்பத் தலைவி, தோப்புப்பட்டி தெற்கு: வி.புதுக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள என்னை போன்ற 63 பயனாளிகளுக்கு வீட்டுமனை கொடுத்தனர். தற்போது இப்பகுதியில் 20-க்கு மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆனால் முறையான ரோடு, தெரு விளக்கு வசதி இதுவரை செய்து தரப்படவில்லை. நாகம்பட்டி ஊராட்சியில் இருந்து எந்த உதவிகளும் செய்வதில்லை. வி. புதுக்கோட்டை ஊராட்சியில் இருந்து தான் இன்று வரை குடிநீர் வசதி செய்கின்றனர். குடிநீர் கட்டணம் செலுத்துகிறோம்
குடியிருப்பது ஒரு ஊராட்சியில், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடிப்படை அட்டைகள் வைத்திருப்பது மற்றொரு ஊராட்சியில் என இப்பகுதி மக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதி இப்பகுதி மக்களின் ஒருமித்த கருத்தை கேட்டறிந்து அவர்களின் ஒட்டுமொத்த விருப்பப்படி ஏதோ ஓர் ஊராட்சியில் அனைத்து ஆவணங்களையும் முறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார்.