உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோரங்களில் குவியும் மணல்களை அகற்றலாமே: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம்

ரோட்டோரங்களில் குவியும் மணல்களை அகற்றலாமே: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம்

மாவட்டம் முழுவதும் தற்போது ஆடிக்காற்று அதிகளவில் வீசிவருகிறது. இதனால் ரோட்டோரங்களில் பல இடங்களில் மணல் குவிந்திருக்கிறது. இந்த குவியல் காற்றடிக்கும் நேரத்தில் அவ்வழியில் வாகனங்களில் வருவோரின் கண்களில் விழுந்து கண் இமைக்கும் நேரத்தில் விபத்தை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது மணல் லோடுகளை ஏற்றி செல்லும் லாரிகள் திறந்த நிலையில் மணல் ஏற்றி செல்வதாலும் அதிகளவில் மணல்கள் ரோட்டில் சிதறி ரோட்டோரங்களில் குவிகிறது. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு பல்வேறு பகுதிகளிலிருக்கும் மணல்கள் மழை நீரோடு கலந்து ரோட்டோரங்களில் தேங்குகிறது. இப்படி தேங்கிய மணலை கவனிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகம்,நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாமலிருப்பதால் பல பகுதிகளில் பெரும் விபத்துக்கள் ஏற்படுகிறது. தற்போது ஆடி மாத காற்று வீசுவதால் ரோட்டோர மணல்கள் சூறாவளி போல் சுழன்று சுழன்று வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருசிலர் உஷாராக கண்களை பாதுகாக்க கண்ணாடி,ஹெல்மட் அணிந்தவாறு பயணிக்கின்றனர். இவற்றை அணியாமல் செல்வோர் காற்றடிக்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். தொடரும் இப்பிரச்னையை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ