உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கரடு முரடான ரோடு; விஷப் பூச்சிகளால் தவிப்பு சின்னாளபட்டி வி.எம்.எஸ்., காலனியிங் தொடரும் அவலம்

கரடு முரடான ரோடு; விஷப் பூச்சிகளால் தவிப்பு சின்னாளபட்டி வி.எம்.எஸ்., காலனியிங் தொடரும் அவலம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி வி.எம்.எஸ்., காலனியில் சாக்கடைகள் கொசு உற்பத்தி மையமாகவும், பல மாதங்களாக தோண்டி கிடப்பில் விடப்பட்ட ரோட்டில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் அவலமும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.சின்னாளபட்டி பேரூராட்சியின் 9வது வார்டில் உள்ள இப்பகுதியில் ரோடு, சாக்கடை ,தெருவிளக்கு, சுகாதாரமான சூழல் போன்ற அடிப்படை வசதிகளில், பராமரிப்பதிலும் பேரூராட்சி நிர்வாகம் பாராமுகமாக உள்ளது. ராமநாதபுரம் ரோட்டில் மயானத்தை முறையாக பராமரிக்காததால் புதர் மண்டியுள்ளது. திடக்கழிவு மேலாண்மைக்காக கழிவுகளை தரம் பிரித்து உரத்தயாரிப்பிற்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். சாக்கடையில் கழிவுகள் குவிவது தாராளமாகி விட்டது. அள்ளப்படும் கழிவுகளை கரையில் விட்டுச் செல்கின்றனர். இவை மீண்டும் சாக்கடையில் விழுந்து தேக்கத்தை உருவாக்குகிறது. இவற்றை முழுமையாக அகற்ற நடவடிக்கை இல்லை. பல மாதங்களாக பாலிதீன் கழிவுகள் குவிந்து அசுத்த நீருடன் கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. கழிவுகள் மேவிய நிலையில் தவளை எலி ஆகியவற்றை விரட்டி வரும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் குடியிருப்புகளுக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது . சில மாதங்களுக்கு முன் சீரமைப்பிற்காக தோண்டப்பட்ட ரோட்டின் குழிகள் சரி வர மூடப்படவில்லை. முழுமையற்ற ரோடு பணி, ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளும் கடந்து செல்ல முடியாத அவல நிலையை ஏற்படுத்தி உள்ளது.மயானத்தில் மொத்த கழிவுகளும் குவிக்கப்படுவதால் பிணங்களை எரிப்பதற்காக தோண்டிய மயான குழியில் குப்பை கழிவுகளை குவித்து எரிக்கின்றனர். இப்பிரச்னைகள் மீது மாவட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பகுதியினர் நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.

கிடப்பில் ரோடு பணி

விஜயலட்சுமி, குடும்ப தலைவி, சின்னாளபட்டி: வி.எம்.எஸ்., காலனியில் உள்ள தெருக்களை ரோடு சீரமைப்பிற்காக 4 மாதங்களுக்கு முன் தோண்டும் பணி நடந்தது. பின்னர் கிடப்பில் விட்டு விட்டனர். பணம் வழங்காததால் வேலையை நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இப்பிரச்னையை கண்டு கொள்ளாமல் உள்ளது. சாக்கடை பராமரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். தெருக்களை விட பிரதான சாக்கடை உயரம் அதிகரித்துள்ளது.

தடை பா லிதீன் தாராளம்

சின்னதுரை ,சின்னாளபட்டி: தெருக்களில் போக்குவரத்து தடைபட்டு பல மாதங்களாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக உள்ள இரு தெருக்களில் அசுத்த நீர் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றத்துடன் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சாக்கடையை சுத்தம் செய்து பல மாதங்களாகிறது. இப்பகுதியில் சேகரமாகி வெளியேறும் கழிவுநீர் மயானத்தின் நுழைவாயில் அருகே தேங்கி உள்ளது. அதன் குப்பையும் அகற்றப்படாமல் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேட்டுப்பட்டி, செக்காபட்டி, சிக்கனம்பட்டியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் கழிவுகளை குவிக்கின்றனர். கண்ட இடங்களில் கட்டுப்பாடின்றி கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர்.

விஷப்பூச்சிகள் நடமாட்டம்

பாப்பாத்தி, குடும்ப தலைவி, சின்னாளபட்டி: இப்பகுதியில் சிறுவர்கள், முதியோர் அதிகம் வசிக்கின்றனர். தெருக்களில் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்க வில்லை. கரடு முரடான பாதைகளை கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் காயங்களுடன் தெருக்களை கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. சாக்கடை முழுமையாக நிரம்பிய நிலையில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப் பூச்சிகள் நடமாட்டம் தாராளமாக உள்ளது. அவசர காலங்களில் ஆட்டோ கூட செல்ல முடியாத நிலை உள்ளது. கழிவுகளை எரிப்பதால் அடிக்கடி அடர் புகைமண்டலம் சூழ்ந்து முதியோர் பலர் தொற்றுநோய், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி