உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சவுகர்ய வாழ்வளிக்கும் சவுந்தரராஜப் பெருமாள்

சவுகர்ய வாழ்வளிக்கும் சவுந்தரராஜப் பெருமாள்

தமிழகத்தில் இருக்கும் வைணவ கோயில்களுள் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலும் ஒன்று.திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 17 கி.மீ., துாரத்தில் உள்ள இக்கோயிலில் ஆடித்திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.திருமறைக்காடு என்ற திருத்தலத்தில் அணையும் நிலையில் இருந்து விளக்கின் திரியை ஒரு எலி துாண்டிவிட்டு மோட்சம் பெற்றது. பிற்காலத்தில் இறைவன் அருளால் அந்த எலி தான் மகாபலி என்ற அரசனாக பிறந்தான். அதுபோல் சாபத்தினால் பாதிக்கப்பட்ட மகரிஷி ஒருவர் தவளை உருக்கொண்டு பெருமாளை நோக்கி தவம் புரிந்து முக்தி பெற்ற ஸ்தலம் தான் வடமதுரை.பாண்டியர்களின் ஆட்சியின் போது வட எல்லையாக திகழ்ந்த 'விடாதி' என்ற ஊரே இன்று வடமதுரை எனவும், மதுராபுரியில் இருந்து வந்த ஆயர்குல மக்கள் இங்கு குடியேறி 'வடமதுரை' என பெயரிட்டதாகவும் , இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் மதுரைக்கு அடிக்கடி சென்று மீனாட்சியை வழிபட இயலாத நிலையில் இங்கே மீனாட்சியம்மன் கோயிலை கட்டி 'வடமதுரை' என பெயர் சூட்டியதாகவும் வரலாற்று காரணங்கள் கூறப்படுகிறது.

கண்ணபிரான்

மதுராபுரியில் குடியிருந்த ஆயர்குல மக்கள் அங்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று குடியேறினர். அவர்களில் ஒருசாரர் வடமதுரை வந்து தங்கினர். அவர்களே தங்கள் குல தெய்வமான பெருமாளை பிரதிஷ்டை செய்தனர். தெய்வங்களில் அழகானவர் கிருஷ்ண பரமாத்மா. அந்த அழகையே முன்னிலைப்படுத்தி பிரதிஷ்டை செய்த பெருமாளுக்கு சவுந்தரராஜப் பெருமாள் என பெயர் சூட்டினர். தாயாருக்கு சவுந்தர்யநாயகி என பெயரிடப்பட்டது. 'சவுந்தர்யம்' என்றால் 'அழகு' என பொருள்.மகாபாரதப் போரை முடித்துவிட்டு தன் இனத்தாரை காண வடமதுரைக்கு வந்தார் கண்ணபிரான். வெயிலினால் தாகம் ஏற்படவே அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த ஒரு இடையரிடம் சென்று தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீருக்காக அலைந்தும் நீர் கிடைக்காமல் மாட்டின் பாலை கறந்து தந்தார். தாகம் தணிந்த கண்ணபிரான் இடையரிடம் என்ன வேண்டும் என கேட்க, இப்பகுதி செழிக்க வேண்டும் என்றார் .நான் பால் குடித்த போது பால் துளிகள் சிந்திய இடத்தில் தோண்டினால் வற்றாமல் நீர் கிடைக்கும் என்றார்.

இன்று தேரோட்டம்

அவ்வாறே அங்கு கிணறு தோண்டப்பட்டது இவ்விடமே இன்று பால்கேணி என அழைக்கப்படுகிறது.இது கோயிலில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ளது.வந்தவர் மாயக்கண்ணன் என்பதை உணர்ந்து தங்களுடன் தங்கும்படி கேட்டு கொண்டார். அதன்படி இவ்வூரில் பகவான் கண்ணபிரான் இங்கு சவுந்தரராஜப் பெருமாள் என்ற பெயரில் சேவை சாதிக்கிறார் என்கிறது ஸ்தல புராணம். ஆடி பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடக்கும் ஆடி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி