| ADDED : ஜூலை 21, 2024 05:20 AM
ஒட்டன்சத்திரம்: வானளாவிய எண்ணங்களுடன் உயர்ந்த லட்சியத்துடன் மாணவர்கள் கல்வி பயில வேண்டும்'' என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 264 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறை கட்டடங்கள் 12 ஆய்வகக் கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் புதிய வகுப்பறை கட்டடங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றி பேசியதாவது:மாணவர்கள் வானளாவிய எண்ணங்களுடன் உயர்ந்த லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும். இந்த ஆண்டு ரூ. 44,044 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர். மருத்துவம் தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, கமிஷனர் ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியை மணிமொழி கலந்து கொண்டனர்.