வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் 200க்கு அதிகமான மரங்களை நடவு செய்து வளர்த்து சோலையாக மாற்றி வருகின்றனர் லயன்ஸ் சங்கத்தினர்.வேடசந்துார் சட்டசபை தொகுதியில் மிகவும் குறைந்தளவே மழை பொழிவு உள்ளது. இதனால் பல பகுதிகள் எப்போதுமே வானம் பார்க்கும் பூமியாக வறட்சியான பகுதியாக உள்ளது. இங்கு மழை பொழிவு குறைய மரங்கள் அழிக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும். அழிக்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கையில் சில தன்னார்வ அமைப்புகள் முன்வந்துள்ளனர். இவற்றில் ஒன்றான லயன்ஸ் சங்கத்தினர் வடமதுரை ஒன்றியம் வேல்வார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் மரங்களை அதிகளவில் வளர்க்க பல உதவிகள் செய்கின்றனர். நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி 2012ல் உயர்நிலைப் பள்ளியானது. 2016ல் அதிக பரப்புள்ள புதிய இடத்தில் புதிய கட்டடத்திற்கு இடம் மாறியது. 2018 லிருந்தே லயன்ஸ் சங்கத்தினர் இங்கு மரக்கன்றுகளை வளர்க்க துவங்கினர். அப்போது ஆதி, புங்கம், வாகை, துாங்குமூச்சி, பன்னீர்புஷ்பம் என பல மரங்களை நட்டனர். ஆனால் வேலி பாதுகாப்பின்றி சரி பாதி ஆடு, மாடுகளை அழிந்து போயின. கடந்தாண்டில் வேம்பு, பூவரசு, தேக்கு, நாவல், நீர் மருது, புங்கம் என 200 மரக்கன்று நடவு செய்து பாதுகாப்புடன் பராமரித்து வருகின்றனர். பறவைகளின் வாழ்விடமாகும்
எம்.வேல்முருகன், லயன்ஸ் வட்டார தலைவர், திண்டுக்கல்: இப்பள்ளியில் நீண்ட காலம் ஆசிரியராக பணிபுரிவதால் லயன்ஸ் சங்கம் மூலம் அதிகளவில் இங்கு மரங்களை வளர்க்க முயற்சி எடுத்தேன். 2018ல் மரக்கன்றுகள் நட்டபோது சுற்றுச்சுவரின்றி இருந்ததால் பாதி மரக்கன்றுகள் அழிந்தது. தற்போது பள்ளியை சுற்றிலும் 530 மீட்டர் துாரத்திற்கு சுற்றுச்சுவர், கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆடு, மாடுகளால் பாதிப்பு ஏற்படாது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் வேல்வார்கோட்டை பள்ளி மரங்களால் சூழப்பட்ட பசுமையான பள்ளியாக மாறும். நடவு செய்தவற்றில் காய்ந்து போகும் மரக்கன்றுகளுக்கு மாற்றாக புதிய கன்றுகள் நடவு செய்வோம். இவை வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு உதவுவதுடன் பறவைகள் தங்குவதற்குரிய இடமாகவும் இருக்கும். பறவைகளின் எச்சங்கள் மூலம் விதை பரவலுக்கு வாய்ப்பு ஏற்படும். மனிதன் கழிவாக வெளியேற்று கார்பன் டை ஆக்சைடு வாயுவை மரங்கள் எடுத்து கொண்டும் மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்ஸிஜனை வழங்குகின்றன. -மாணவர்கள் ஆர்வம்
ஆர்.ராமலிங்கம், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, வேல்வார்கோட்டை: மாணவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்களுக்கு நீருற்றி வளர்ப்பதில் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பயன் தெரிவதால் தங்களது வீடு, தோட்டங்களிலும் மரங்கள் வளர்க்கும் எண்ணம் அதிகரிக்கும். பள்ளி மரங்களை வளர்க்க சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தும் வாய்ப்புகளை முயற்சிக்கிறோம். ஒரு மரக்கன்றை முதல் 3 ஆண்டுகளுக்கு பராமரித்து வளர்த்துவிட்டாலே போதும். பழங்கள் கிடைக்கும் மர வகைகளும் நடப்பட்டுள்ளன. உலகில் மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு மழை முக்கியம். அதை வழங்கும் சக்தி மரங்களிடம் உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்தாலே போதும்.