| ADDED : ஆக 20, 2024 12:58 AM
வடமதுரை : 'ஒன்றிய கவுன்சிலராக தேர்வாகி நான்கரை ஆண்டுகள் கடந்தும் மக்கள் கேட்ட எந்த திட்டத்தையும் உருப்படியாக செய்து தர முடியாததால் கிராமங்களுக்குள் தலை காட்ட முடியவில்லை 'என வடமதுரை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.வடமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., நளினா, ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.கவுசிலர் மோகன் பேசுகையில், ''கவுன்சிலராக தேர்வான போது கொரோனா தொற்று பரவல் பிரச்னை ந ஏற்பட்டதால் அதனை காரணம் காட்டி வழக்கமான நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததால் மக்கள் கேட்ட ஏதுவும் நான்கரை ஆண்டுகளில் செய்து தர முடியவில்லை. மக்களிடம் கெட்ட பெயரே உள்ளது. ஊராட்சி அலுவலங்களில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் மின் மோட்டார், மின்வாரிய பாதைகளில் உபகரணங்கள் பழுதானால் சீரமைக்கும் வரை குடிநீர் பிரச்னை நீடிக்கிறது. கூடுதலாக சாதனங்களை கையிருப்பு வைக்க வேண்டும். ஊராட்சி இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ''என்றார். பதிலளித்த ஏ.பி.டி.ஓ., ''ஊராட்சி அலுவலகங்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் சென்றால் தனி இருக்கை வசதி தர 1996ல் முதலே அரசு உத்தரவு உள்ளது. தனி அறைக்கு இதுவரை அரசு அனுமதியில்லை. ஊராட்சி இடங்களை கண்டறிந்து பொது தகவல் பலகை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். கிடைக்கும் நிதி ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் தேர்வு செய்யப்படும்'' என்றார்.