உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள்

துார்வாரப்படாத ஓடை;முச்சந்தியில் குவியும் குப்பை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் 4 வது வார்டு மக்கள்

ஒட்டன்சத்திரம் : துார்வாரப்படாத ஓடை,முச்சந்தியில் குவியும் குப்பை,ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல், தெரு ரோடுகள் சேதம் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 4 வது வார்டில் பிரச்னைகள் உள்ளன.மார்க்கெட் பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு கிழக்கு மேற்கு, பழநி- திண்டுக்கல் ரோடு ,வடக்கு, வ.உ.சி.நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மார்க்கெட் பைபாஸ் ரோடு வடக்கு பகுதியில் சின்ன குளத்திற்கு செல்லும் ஓடை துார்வாரப்படாமல் உள்ளது. சின்னகுளம் நிரம்பி மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஓடை துார்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்துள்ளது.மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் , டூவீலர்கள் ரோட்டை மறித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தாராபுரம் ரோட்டில் தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் ஸ்டாப்பில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வரை பஸ்கள் நடுரோட்டிலே நிறுத்தப்படுகிறது. இதனால் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து மிகுந்த இந்த பகுதியில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. இங்குள்ள பஸ் ஸ்டாப்பை சற்று தள்ளி மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரிய அலுவலகம் பின்புறம் இன்னும் சில பகுதிகளில் தெருரோடுகள் அமைக்க வேண்டும்.சின்ன குளம் பகுதியில் குப்பையை கொட்டி தீ வைப்பதால் உருவாகும் புகையால் தாராபுரம் ரோடு பகுதி குடியிருப்பு வாசிகள் சுவாசக் கோளாறால் சிரமப்படுகின்றனர். தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும். ரோட்டிலே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

ஓடையை துார்வாருங்க

டி. குமார் தாஸ், பா.ஜ., நகர பொதுச்செயலாளர் ஒட்டன்சத்திரம்: விரிவாக்க பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இங்குள்ள ஓடையை துாவார வேண்டும்.தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதேபோல் மார்க்கெட் பைபாஸ் ரோட்டிலும் ஆக்கிரமிப்பு காரணமாக நெரிசல் குறைந்த பாடில்லை . பை பாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். வார்டின் பல பகுதிகளில் தேவையான இடங்களில் இன்னும் அதிக தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். மழைகாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வடிகால் அமைக்க வேண்டும்.

குடிநீர் பிரச்னை இல்லை

எஸ்.கோபி, திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் பொருளாளர்: வார்டுக்குள் தேவையான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை. பல இடங்களில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் வீடு தோறும் குப்பை வாங்கி செல்கின்றனர். சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும். நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.

நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு

அழகேஸ்வரி, கவுன்சிலர் (தி.மு.க.,): அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வார்டில் தனியாக ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. புதிதாக உருவான நகர்களில் தெரு விளக்குகள், சாக்கடை வசதி செய்து தரப்படும். வ.உ.சி நகர் பகுதியில் புதிதாக சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.வார்டுக்குள் குழாய்கள் அமைக்கும் பணி முடிந்தவுடன் ரோடுகள், சாக்கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை வாங்கப்பட்டு வருகிறது. பல தெருக்களில் புதிதாக பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. சின்னக்குளம் மறுகால் செல்லும் வாய்க்காலை துார் வார நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ