| ADDED : ஆக 22, 2024 03:51 AM
ஒட்டன்சத்திரம்: காய்கறி வரத்து அதிகரித்துள்ள நிலையில் வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைத்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, அம்பிளிக்கை சுற்றிய பகுதிகளில் சின்ன வெங்காயம், சுரைக்காய், பூசணிக்காய், முருங்கை, அவரை அதிகமாக விளைவிக்கப்படுகிறது.இப்பகுதியில் கோடை மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்ததால் விவசாயிகள் காய்கறிகளை அதிகம் பயிரிட்டு இருந்தனர். தற்போது பல இடங்களில் காய்கறிகள் அறுவடை நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டில் காய்கறி வறுத்து கணிசமாக அதிகரித்துள்ளது.கேரளாவில் பெய்யும் தொடர் மழை காரணமாக நம் மாநில வியாபாரிகள் கொள்முதல் அளவை மிகவும் குறைத்துக் கொண்டனர். இதனால் காய்கறிகள் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளது.ஜூலையில் கிலோ ரூ. 60க்கு விற்ற முருங்கை நேற்று ரூ. 15, ரூ.26க்கு விற்ற பீட்ரூட் ரூ.10, ரூ.20க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.8, ரூ.6 க்கு விற்ற சுரைக்காய் ரூ.2 ரூ.30க்கு விற்ற பீன்ஸ் ரூ. 7, ரூ.32 க்கு விற்ற பச்சைப்பயறு ரூ.8 க்கு விற்பனை ஆனது.கமிஷன் கடை உரிமையாளர் குமார் கூறுகையில், இனி வரும் நாட்களில் காய்கறி வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றார்.பெரிய கோட்டை விவசாயி பெருமாள்சாமி கூறுகையில், தற்போது விற்கும் காய்கறி விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாது என்றார்.