| ADDED : பிப் 11, 2024 01:13 AM
சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சியில் அடுத்தடுத்து செயல் அலுவலர்கள் இடமாற்றம் தொடர்வதால் திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் கண்காணிப்பில் குளறுபடிகள் நீடிக்கிறது.சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றபோது செயல் அலுவலராக இருந்த கலையரசி கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் செயல் அலுவலராக பொறுப்பேற்ற பிரகந்தநாயகி 3 மாதங்களில் திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து பொறுப்பு செயல் அலுவலராக பதவி ஏற்ற கமருதீன் ஒரே நாளில் வேறு பேரூராட்சிக்கு மாறுதல் பெற்று சென்றார்.இதன்பின் கோவை மாவட்டத்திலிருந்து வந்த நந்தகுமார் 6 மாதங்களில் மீண்டும் கோவை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 2023ல் செயல் அலுவலராக பொறுப்பேற்ற செல்வராஜ் 4 நாட்களுக்கு முன் கோவை மாவட்டம் நரசிங்கம்பாளையம் பேரூராட்சிக்கு மாற்றப்பட்டார். தற்போது சித்தையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள சிவக்குமார் சின்னாளப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராக உள்ளார்.2 ஆண்டுகளில் அடுத்தடுத்து 6 செயல் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பேரூராட்சி நிர்வாகம், திட்டப்பணிகள், அடிப்படை வசதிகளில் தொய்வை ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியினர் கூறுகையில், 'ஒரு பேரூராட்சியின் செயல் அலுவலர் பொறுப்பேற்ற பின்பு அங்குள்ள வார்டுகள், தெருக்களை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் 5 மாதங்களாகிவிடும். 2 ஆண்டுகளில் 6 செயல் அலுவலர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு இருப்பதால் இப்பகுதிக்கான தேவை குறித்த புரிதல் இல்லாத சூழலில் நலப்பணிகளில் பெறும் பின்னடைவு நீடிக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிதாக பொறுப்பேற்கும் செயல் அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தால் அதனை நிறைவேற்றும் முன்பே அடுத்த செயல் அலுவலர் நியமிக்கப்படும் குளறுபடியான சூழல் நிலவுகிறது. இச்செயல் பேரூராட்சி நிர்வாகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் கட்சி நிர்வாகிகளின் தலையீடு, கவுன்சிலர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் உள்ளிட்ட பிரச்னைகள் சின்னாளபட்டி பேரூராட்சிக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் பெரும் தடையாக உள்ளது. இதே நிலை தொடரும் சூழலில் பேரூராட்சி நிர்வாகம் முடங்கும் அபாயம் உள்ளது. இப்பிரச்னைகளுக்கு பேரூராட்சிகள் துறை நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் 'என்றனர்.