எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் பெறுதல் 83 சதவீதம் நிறைவு: கலெக்டர்
திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 83 சதவீத படிவங்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சரவணன் கூறினார். அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) பணிகளில் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் நவ. 4 முதல் 100 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. 83 சதவீத படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட படிவங்களில் வருகையின்மை, இடம் பெயர்ந்தோர், இறப்பு ,கண்டுபிடிக்க இயலாதவை திரும்பப்பெற இயலாத காரணத்தினால் அவைகளை ஏ.எஸ்.டி., என பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. இது குறித்த பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. திரும்ப பெற இயலாத படிவங்கள் குறித்து மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சூப்பர் செக் செய்யப்பட்டது. எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கத்தின்படி அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்டு அவைகள் அனைத்தும் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கு படிவம்- 6 வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவாக்காளர்கள் அனைவரும் படிவத்தை சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று பூர்த்தி செய்து வழங்கிட வேண்டும் என்றார்.