மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
02-Aug-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் ஆடி பெருக்கையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு உற்ஸவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 32ம் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. வெக்காளியம்மன் பரிவாரங்களான வெற்றி விநாயகர், பால நாகம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோயில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் குழந்தைகளை துாக்கிய்பபடி, அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்திய பூக்குழி இறங்கினர்.திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. பெண்கள், புது தாலிக்கொடியில் மாங்கல்யம் மாற்றியும், கோயில்களில் அம்மனுக்கு பூ, சந்தனம், குங்குமம், வளையல், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை நெய்வேத்தியம் படைத்தும் வழிபட்டனர். ஆத்தூர் : அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வழிபாடு, கிடா பலியிடல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். கன்னிவாடி:தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் திருமஞ்சன அபிஷேகத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடந்தது. ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், துளசி மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தாண்டிக்குடி: கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன், குறிஞ்சியாண்டவர் பூம்பாறை குழந்தை வேலப்பர், பண்ணைக்காடு மயான காளியம்மன். கானல்காடு பூதநாச்சியம்மன், தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து குல தெய்வ வழிபாடுகளும், பொங்கல் வைத்து கிடா பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. ஒட்டன்சத்திரம் : காமாட்சி அம்மன், கே.அத்திக்கோம்பை காளியம்மன், தங்கச்சியம்மாபட்டி கரை மாரியம்மன், எஸ்.அத்திக்கோம்பை உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதேபோல், பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விருப்பாச்சி தலையூற்று நல்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குழந்தை வேலப்பர் கோயிலில் வேலப்பருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வடமதுரை : சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் வந்தார். ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர். வடமதுரை மகா காளியம்மன், மாரியம்மன், அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில், அனைத்து பகுதிகளிலும் குல தெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
02-Aug-2025