உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண், கழிவு மேவிய சாக்கடைகளின் பராமரிப்பை துரிதப்படுத்துங்க: கோடைமழை பாதிப்பை குறைக்க வழி காணுங்க

மண், கழிவு மேவிய சாக்கடைகளின் பராமரிப்பை துரிதப்படுத்துங்க: கோடைமழை பாதிப்பை குறைக்க வழி காணுங்க

மாநகராட்சி துவங்கி ஊராட்சியின் குக்கிராமம் வரை குடிநீர் தெருவிளக்கு போன்றவற்றிற்கு இணையாக சாக்கடை வசதி அடிப்படைத் தேவைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கான கட்டமைப்பை உருவாக்குவதை விட அதனை பராமரிக்க வேண்டிய அத்தியாவசிய சூழல் உள்ளது. இருப்பினும் 'ஆதாய' நோக்கில் இது போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் ஆர்வம் காட்டுகின்றன. அவற்றை தொடர்ந்து பராமரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றன.நகர உள்ளாட்சி அமைப்புகளில் இதற்கான பாதாள சாக்கடை திட்டங்கள் உருவாக்கப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்குகின்றன. உரிய காலத்தில் முடிக்கப்படாமல் கிடப்பிலும் விடப்படுகின்றன. உரிய அளவுகளற்ற குழாய்கள், நீரோட்ட வசதிக்கேற்ற தாழ்வான பகுதி நோக்கிய வழித்தடம் போன்றவற்றை பொறியியல் பிரிவு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. பெரும்பாலான இடங்களில் சமமற்ற நில மட்டத்தில் குழாய்கள் அவசர கதியில் பதித்து மேலோட்டமாக மூடப்படுகிறது. இதையடுத்து பாதாள சாக்கடை கட்டமைப்புகள், போக்குவரத்து சிரமங்கள் மட்டுமின்றி சுகாதார கேட்டை ஏற்படுத்தும் அவலமும் நீடிக்கிறது.பேரூராட்சி, ஊராட்சிகளில் சாக்கடை கழிவுகளை அகற்றுவதில் தொய்வு காரணமாக பெரும்பாலான இடங்களில் முழுவதுமாக மண் மேவியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இன்றி சம்பந்தப்பட்ட வளாகங்களை சூழ்ந்து, கொசுத்தொல்லை தொற்றுநோய் பரவல் போன்ற சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி மழை நீருடன் கலந்த கழிவு நீர் குடியிருப்புகளில் புகும் அவலம் வாடிக்கையாகிவிட்டது. நிதி பற்றாக்குறை, துாய்மை காவலர்கள் காலிப்பணியிட அதிகரிப்பு போன்ற காரணங்களை கூறி உள்ளாட்சி நிர்வாகத்தினர் மட்டுமின்றி கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் சுகாதாரம் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சாக்கடை தொற்றுநோய் பரப்பும் மையங்களாக மாறி வருகின்றன. சமீபத்திய மழைக்கால அவசிய சூழல் கருதி மாவட்ட நிர்வாகம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சாக்கடை பராமரிப்பு பணிகளை முடுக்கி விட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை