உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

பழங்குடியின மக்களுக்கான வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக 51 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக ,''மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி தெரிவித்தார்.

துறையின் பங்கு

சமூக, பொருளாதார அளவில் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியின இன மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு வகைகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களும், ஆதிதிராவிடர் நலவிடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

துறையின் பணிகள்

ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் விடுதிகளை கண்காணித்தல், மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், அவர்களின் குறைகளை கேட்டறிதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறோம். மாணவர்கள் மட்டுமல்ல அந்த பிரிவை சேர்ந்த பொதுமக்களுக்கும் அரசுத் திட்டங்களை கொண்டு செல்தல், தீண்டாமை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்றவற்றையும் துறையின் சார்பாக கண்காணிக்கிறோம்.

பள்ளிகள், விடுதிகள் செயல்பாடு

மாவட்டத்தில் துறையின் கீழ் பள்ளி அளவில் ஆண்கள் விடுதிகள் 24, பெண்கள் விடுதிகள் 13, கல்லுாரி ஆண், பெண் விடுதிகள் தலா 2 ,பழங்குடியின விடுதிகள் என 42 விடுதிகள் உள்ளன. ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளிகள் 10, உயர்நிலைப்பள்ளி 1, மேல்நிலைப்பள்ளி 3 என 13 பழங்குடியினர் நல உண்டி உறைவிட தொடக்கப்பள்ளிகள் 7, மேல்நிலைப்பள்ளி 1 என 8 உள்ளன. இங்கு ஆண், பெண் என 2227 மாணவர்கள் பயில்கின்றனர்.

மாணவர்களுக்கான வசதிகள்

விடுதிகள் அனைத்திலும் இலவச உணவு வழங்கப்படுகிறது. எண்ணெய், சோப்பு போன்றவை வழங்கப்படுகிறது. இதோடு படுக்கைக்கு தேவையான போர்வை, பாய்கள்,முதலுதவி பெட்டி, கல்லுாரி விடுதிகளுக்கு தொலைக்காட்சி, பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படுகிது.

பொருளாதார மேம்பாட்டிற்கான ஏற்பாடு வீட்டுமனை பட்டா வழங்குதல், வீடுகள் கட்டித் தருதல், அடிப்படை வசதிகளான குடிநீர் தெருவிளக்கு வசதி, மயானம், மயான பாதை அமைத்தல் போன்ற திட்டங்களும், பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரங்கள் ,சலவைப் பெட்டிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 3 முதல் 5 வகுப்புவரை ரூ.500-, 6ம் வகுப்பிற்கு ரூ.1000, 7 , 8ம் வகுப்பிற்கு ரூ.1500 என ஆண்டு தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதற்குரிய விண்ணப்பங்கள் பள்ளியின் மூலம் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. உயர்கல்வி சிறப்பு தொகை வரை அனைத்து உதவிகளும் துறையின் வாயிலாக வழங்கப்படுகிறது.

குடியிருப்பு திட்டங்கள் செயல்படுகிறதா

நகர்ப்புற, ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதிசெய்து, முழுமையான சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுதிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊராட்சிகளுக்கு ரூ. 3 கோடி அளவில் திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக பணிகளும், பேரூராட்சிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பீட்டிலும் திட்டப் பணிகளுக்கான வரைவுகள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் நிதி பெற்று அந்தந்த திட்ட இயக்குநர் வாயிலாக பணிகள் நடக்கும். பழங்குடியினர்களுக்கு மாவட்டத்தில் 51 வீடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதா...

ஏழ்மை நிலையிலுள்ள,வீடற்ற ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் கூட ஒட்டன்சத்திரம் அருகே 250க்கு மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் துறையின் பங்கு...

தீண்டாமை இல்லா மாவட்டமாக இருக்க வேண்டும். அவ்வாறு புகார்கள் வந்தால் நேரடியாக போலீசாரின் மூலம் விசாரிக்கிறோம். போலீசாரிடம் தரவுகள் பெற்று சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, அரசுப்பணி போன்றவற்றை பெற்றுத் தருகிறோம். சமீபத்தில் கூட 8 நபர்களுக்கு சமயலர் பணி கொடுக்கப்பட்டுள்ளது. 28 நபர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக் கொடுத்துள்ளோம். தீண்டாமையை விட்டொழித்து பொது மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்தை தேர்ந்தெடுத்து அக்கிராமத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை