| ADDED : நவ 24, 2025 09:26 AM
ஆத்தூர்: நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழையால், கூழையாற்றில் இருந்து ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளான மணலூர், மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தாண்டிக்குடி, புல்லாவெளி, ஆடலூர் பகுதிகளை நீர்பிடிப்பாக கொண்டு, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், 30க்கும் மேற்பட்ட கிராம கூட்டு குடிநீர் திட்டங்கள், இப்பகுதியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. 2023ல் 5 முறையும், கடந்தாண்டில் 4 முறையும் நிரம்பிய நீர்த்தேக்கம், இந்தாண்டு போதிய மழையின்றி வாய்க்காலின் வரத்து நீர் தடை பட்டிருந்தது. கடந்த 6 மாதங்களாக குறைய துவங்கிய நீர்மட்டம், கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் 2.5 அடி(மொத்த கொள்ளளவு 24 அடி)யாக இருந்தது. தீபாவளி பண்டிகை காலத்தில் பெய்த மழையால் தண்ணீர் வரத்து இருந்தபோதும், ராஜவாய்க்கால் வரத்துநீர், பாசன கண்மாய்களுக்கு சென்றது. கூழையாற்று வரத்து நீரால், நேற்றைய நிலவரப்படி 13 அடிவரை உயர்ந்தது. பின்னர் மழை இல்லாததால், குறைந்து நேற்று நிலவரப்படி 11 அடி நீர்மட்டம் இருந்தது. பகலில் தொடர் சாரல் மழை துவங்கியதால், சில மணி நேரங்களில் கூழையாற்றில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.