| ADDED : மார் 04, 2024 07:29 AM
திண்டுக்கல்: வத்தலகுண்டு பா.ஜ., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் தன் மனைவியுடன் தற்கொலை செய்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி பா.ஜ., வினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.வத்தலகுண்டைச் சேர்ந்த பா.ஜ., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் 35. இவரது மனைவி சிவதர்ஷினி 29. இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட் அருகே அலைபேசி கடை நடத்தி வந்தார். அவருடன் நெருக்கமாக பழகிய சிலர் பணத்தை மணிகண்டனிடமிருந்து ஏமாற்றி பறித்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும், அவமானப்படுத்துவதாகவும் ஒரு கடிதம் எழுதி வைத்து மனைவியுடன் மணிகண்டனும் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.இருவரது உடலும் பிரேத பரிசோனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.இதனிடையே மணிகண்டன் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார், ஒரு பெண் உள்ளிட்ட இருவரிடம் மட்டும் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இதைறிந்த பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன், மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் சிவா ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் நேற்று ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி., பிரதீப் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.