கோடை தோறும் வனப்பகுதியில் ஏற்படும் காட்டு தீ தடுக்கலாமே: கட்டுப்படுத்த தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான திண்டுக்கல் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வனப்பகுதி உள்ளது. இதில் திண்டுக்கல், கொடைக்கானல் வனக்கோட்டங்கள் உள்ளன. அரிய வன உயிரினங்கள் , மர வகைகள் உள்ளன. கன்னிவாடி, வத்தலக்குண்டு, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழநி, சிறுமலை, நத்தம் உள்ளிட்ட மலைப்பகுதி சார்ந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் காட்டுத்தீ பரவி வன நிலங்கள் தீக்கிரையாகி வருவது வழக்கமாக உள்ளது.வனப்பகுதியில் பரவும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு நவீன உபகரணங்கள் ஏதுமின்றி கற்கால முறையில் இலை, தலைகளைக் கொண்டே தீயை கட்டுப்படுத்தும் நடைமுறை உள்ளது. இதனால் வனத்துறையினர் துயரத்தை அடைகின்றனர்.காட்டு தீயை கட்டுப்படுத்த துவக்கத்தில் தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டன. வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரத்தையும் சம்பந்தப்பட்ட பகுதியில் ஏற்படுத்தி வந்தனர். 2024ல் இது போன்ற செயல்களில் வனத்துறை மெத்தனத்தை கடைபிடித்ததால் கொடைக்கானலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் மாதக்கணக்கில் தீப்பற்றி எரிந்தது.வன நிலங்களும் பாதிக்க இயற்கை சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்தது. இதை கட்டுப்படுத்துவதற்கு வனத்துறையினர் போராடியும் பலன் கிட்ட வில்லை.இது போன்றவை மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் நடப்பதை வனத்துறையினர் அறிந்தும் முன்னெச்சரிக்கையின் நடவடிக்கையில் பின்தங்கியே உள்ளனர். இதை கட்டுப்படுத்த கோடை காலங்களில் ஆங்காங்கே தற்காலிக பணியாளர்களை நியமித்து வனப்பகுதியை கண்காணிப்பது, ரோட்டோரங்களில் விழிப்புணர்வு வாசகங்களை ஏற்படுத்துதல், வனத்துறையினருக்கு தீயை கட்டுப்படுத்துவதற்கு நவீன உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்டவை கோரிக்கையாக உள்ளது. கோடையின் துவக்கத்திலே வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ள நிலையில் புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருக வனப்பகுதியில் எளிதில் தீ பற்றும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.