| ADDED : ஜூலை 24, 2024 05:38 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், திண்டுக்கல், பழநி, சிறுமலை, நத்தம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பகுதிகளாகவும், ஆன்மிக தலங்களாகவும் உள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. நான்கு வழிச் சாலை , மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகள் என விரிவாக்கத்திற்காக ஏராளமான நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. இருந்த போதும் ரோடு சம்பந்தப்பட்ட பணிகளில் தரமற்ற பணிகளால் அவை விரைவில் சேதம் அடைவது வழக்கமாக உள்ளது. தாழ்வான ரோட்டோரங்களில் தேங்கும் மழை நீரால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இவற்றை தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை ஆங்காங்கே தரைப்பாலம் , குழாய் பாலங்களை அமைத்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியை பொருத்தமட்டில் 50க்கு மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் பாலங்கள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு மழை நீர் வடிந்து ஓடும் தாழ்வான பகுதிகளில் பாலங்கள் அமைக்காமல் மேடான இடங்களில் அமைக்கும் போக்கை கையாண்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்ட பாலங்களில் மழைநீர் செல்லாது அருகில் தேங்கி நிற்கின்றன. இதனால் விரைவில் ரோடு சேதம் அடைவதும், வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது .இதோடு கொசுக்கள் கேந்திரமாகவும் மாறி வருகிறது. போக்குவரத்து வசதிக்காக ரூ. கோடிக்கணக்கில் ரோடு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்ட போதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை முறையாக ஆய்வு செய்யாமல் வெறுமனே விட்டு விடுகின்றனர். இத்தகைய போக்கு அரசு நிதியை வீணடிப்பதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம்தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.