| ADDED : மார் 07, 2024 06:27 AM
மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்து வருகிறது. குளிர்பான கடைகள், ரோட்டோர ஜூஸ் கடைகளும் அதிகரிக்க துவங்கி விட்டன. ரோடுகளில் கானல் நீர் படலமும் அதிகளவில் உள்ளது. சிறிது துாரம் சென்றாலே உடலில் வியர்வை கொட்ட பரிதவிக்கின்றனர். இதை தவிர்க்க இந்த நேரத்தில் பருத்தி ஆடைகளை அணிவதோடு நீர் ஆகாரங்களை அதிக அளவில் பருகலாம். பழச்சாறு, பழங்கள் போன்றவைகளை தினமும் உட்கொள்ள வேண்டும். மோர், இளநீர், நுங்கு போன்றவைகளையும் சாப்பிடுவதோடு மசாலா உணவுகளை தவிர்க்கலாம். இது மட்டுமன்றி துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். முதியோர் , உடல் நல கோளாறு உள்ளவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது குடை எடுத்துச் செல்லலாம். வாகனங்களில் பயணிப்போர் வெயிலின் தாக்கம்,அனல் காற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் உடைகளை அணியவது சிறப்பு . அதிக வெப்பம் உள்ளதால் வீடுகளில் மின்விசிறி போன்ற பயன்பாடு அதிகரிப்பால் மின் தேவை அதிகரித்து அடுத்த மாத மின் கட்டணம் அதிகரிக்கும். அதற்கும் பொதுமக்கள் தயாராக வேண்டும். வெளியூர் பயணம் போது போதுமான அளவு தண்ணீர் எடுத்துச் செல்லலாம். எதிர்வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் . இதை கருதி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.