காபி விவசாயிகளை ஏமாற்றும் புரோக்கர்கள்; இந்திய காபி வாரிய துணை இயக்குநர் எச்சரிக்கை
திண்டுக்கல்; 'விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காபி வாங்கி புரோக்கர்கள் ஏமாற்றுகின்றனர். விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்''என இந்திய காபி வாரிய துணை இயக்குநர் டாக்டர் தங்கராஜா கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் தாண்டிக்குடி, ஆடலுார், பெருமாள்மலை, வத்தலக்குண்டு, சிறுமலை உட்பட பல்வேறு பகுதிகளில் 29 ஆயிரம் ஹெக்டேரில் காபி சாகுபடி நடக்கிறது. ஆண்டுக்கு 6000 மெட்ரிக் டன் காபி உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பெல்ஜியம், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தற்போது பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் காபி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு விளையும் காபிக்கு மவுசு அதிகரித்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு விலை (கிலோ ரூ.450) ஏறியுள்ளது. இதனால் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு காபியை வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. தங்களிடம் காபி வாங்க வருபவர்கள் உண்மையான வியாபாரிகளா, போலிகளா என விசாரித்து சரியான விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டும். மழையால் காபி பயிர்களில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதைத்தடுக்க பயிர்கள் அறுவடைக்கு தயாரானதும் பறித்து விட வேண்டும். காபி வாரியம் சார்பில் மறுநடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 25 ஹெக்டேருக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு களம் கட்டுதல், கோடவுன் அமைத்தல், குட்டை அமைத்தல் போன்ற பல்வேறு செயல்களுக்கும் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 2024ல் இதுவரை 300 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.