| ADDED : நவ 28, 2025 08:02 AM
திண்டுக்கல்: -திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்திசெய்தவர்கள் திரும்ப வழங்கவேண்டும். விண்ணப்பத்தை திரும்ப வழங்கினால் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும் என கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார். திண்டுக்கல்லில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.,) நடக்கிறது. எஸ்.ஐ.ஆர்., படிவங்களை திரும்பப்பெறுவது தொடர்பாக கலெக்டர் சரவணன் அளித்த பேட்டி: மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலமாக 97.49 சதவீதம் எஸ்.ஐ.ஆர்., படிவம் வழங்கப்பட்டுள்ளது. டிச.4க்குள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடக்கிறது. மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர்., படிவங்களில் 69.42 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவைகளையும் திரும்ப பெறும் பணியில் அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெறும். எனவே, வாக்காளர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வழங்கவேண்டும் என்றார்.