உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் நிதியில் தேனியில் மண்டபம் தற்போதைய நிலை தொடர கோர்ட் உத்தரவு

பழநி கோயில் நிதியில் தேனியில் மண்டபம் தற்போதைய நிலை தொடர கோர்ட் உத்தரவு

மதுரை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டத்தில் இரு கோயில்களின் நிலத்தில் திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில்,'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கப்படும். உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயில் நிலத்தில் ரூ.4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார். இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரி நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணுவர்தன் ஆஜரானார். நீதிபதிகள்,'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். இதுபோல் நிலுவையிலுள்ள பிற வழக்குகளுடன் சேர்த்து ஆக.19 ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்,' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை