| ADDED : ஜூலை 17, 2024 12:23 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் வனப்பகுதியை யொட்டிய விளை நிலங்களில் தென்னை, வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர். பெரும்பாலும் இரவில் வருவதால் விவசாயிகள் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர்.சில மாதங்களாக கோம்பைபட்டி பகுதியில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வதோடு விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பழநி அருகே வரதமாநதி அணை, கோம்பைபட்டி, ஆயக்குடி, பாலாறு பொருந்தலாறு அணை பகுதிகளில் யானை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. மாலை, இரவு நேரங்களில் வெளிவரும் யானையை சிலர்படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இது போன்ற அச்சுறுத்தும் வகையில் யானைகளை சீண்டுவதால் மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.காட்டுப்பன்றிகள் வனப்பகுதி அருகில் மட்டுமில்லாமல் ஆற்றுப்பகுதியில் புதர்களில் மறைந்திருந்து இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து விளை பொருட்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதுடன் பொருளாதார இழப்பும் அடைகின்றனர்.