உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்

விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்

பழநி : பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. கோடைகால நீர்த்தேக்கம், பாலாறு-பொருந்தலாறு அணை ஆகியவை பழநி நகரின் குடிநீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. கொடைக்கானலில் மழை இல்லாததால் பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் குறைந்து ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது. பழநி நகரின் குடிநீருக்காக பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 25 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்து சிறிதளவு தண்ணீர் கூட எடுக்க முடியாத நிலை ஏற்படவே நான்கு நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், பழநியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கலெக்டரிடம், நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் கோரிக்கைவிடுத்தார். ஆர்.டி.ஓ., வேலுச்சாமி நேற்று அணை பகுதியில் ஆய்வு செய்தார். விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டிருந்த பாலாறு, தாடாகுளம் மதகுகளை பொதுப்பணி துறையினர் அடைத்தனர். ஆய்வின் போது நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) முத்து உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !