கொடிக்கம்பங்கள் நட ரோட்டை டிரில்லர் போட்டு துளைத்த தி.மு.க.,வினர்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க., சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்திற்கு கொடிக்கம்பங்கள் நட தி.மு.க., வினர் ரோடை டிரில்லிங் செய்து துளையிட்டதால் ரோடு சேதமானது. திண்டுக்கல் - - பழநி ரோடு பைபாஸ் அருகே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்காக பொதுக்கூட்ட மேடை போடப்பட்டுள்ள கிரீன்பார்க் ஓட்டல் முதல் முத்தழகுபட்டி பிரிவு வரை ஒரு கிலோ மீட்டர் வரை தி.மு.க., கொடிகள் அடங்கிய இரும்பு கம்பிகள் நடப்பட்டிருந்தன. இதற்காக சென்டர்மீடியனை யொட்டி குறிப்பிட்ட இடைவெளியில் பழநி ரோடு முழுவதும் டிரில்லிங் செய்யப்பட்டு துளையிடப்பட்டது. அதோடு சென்டர் மீடியனில் பாதியில் துளையிட்டு கம்புகளையும் சொருகி கொடிக்கம்பியோடு கட்டியிருந்தனர். இது விபத்து ஏற்படும் வகையில் இருந்த நிலையில் நன்றாக இருந்த ரோடையும் துளையிட்டு சேதப்படுத்தி உள்ளனர். நாளைடைவில் இதில் பள்ளங்கள் உருவாகி விபத்துக்கும் வழிவகுக்கும். இச்செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.