உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமலை ஊராட்சியை பிரிக்காதீங்க உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

சிறுமலை ஊராட்சியை பிரிக்காதீங்க உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

திண்டுக்கல்:' சிறுமலை ஊராட்சியை பிரிக்காதீங்க, ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை கொடுங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 282 பேர் மனுக்கள் வாயிலாக குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 282 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 327 பயனாளிகளுக்கு ரூ.17.21 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த விடுதிக் காப்பாளர், காப்பாளினி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சின்னாளப்பட்டி அரசுப் பள்ளி மாணவியர் விடுதி காப்பாளினி சித்ரா, கன்னிவாடி அரசு பள்ளி மாணவியர் விடுதி காப்பாளினி தவமணி, காசிப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் காளிமுத்து ஆகியோருக்கு பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தொழிலாளர் உதவி ஆணையாளர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு கலந்துகொண்டனர்.

சிறுமலையை பிரிக்காதீங்க

சிறுமலைபுதுார் மக்கள் அளித்த மனுவில் ,சிறுமலை ஊராட்சியை சிறுமலை, தென்மலை என இரண்டாக பிரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு செய்வதில் பொதுமக்களுக்கு ஆட்சேபனை உள்ளது. பிரிக்காமல் சிறுமலைப்புதுார் ஊராட்சி என அறிவிக்க வேண்டும். சிறுமலையில் தான் அதிக வசதிகள் உள்ளது. தென்மலை வனத்துறை வசம் உள்ளது. ரோடுகள் தொடங்கி அனைத்து வசதிகளும் குறைவு. சிறுமலை, தென்மலை என பிரிக்காமல் சிறுமலைபுதுார் ஊராட்சி என அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் சங்கத்தினர் அளித்த மனுவில், ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் அதிகளவில் வெளி மாவட்ட காளைகளே பங்கேற்கின்றன. உள்ளூரைச் சேர்ந்த விவசாயிகளின் காளைகள் பங்கேற்க முடிவில்லை. இதற்கு காரணமாக காளை அவிழ்பதற்கான அனுமதி சீட்டு முறை உள்ளதுதான். இந்த அனுமதி சீட்டு அதிக பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்தும் டோக்கன் கிடைப்பதில்லை. பணம் படைத்தவர்கள் காளைகளின் உரிமையாளர்களுக்கே டோக்கன் கிடைக்கிறது. ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்தால் தான் டோக்கன் கிடைக்கிறது. உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி