உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்துக்கு வித்திடும் மின்கம்பங்கள்...கழிவு நீர்கசிவு கொடை 19வது வார்டில் பரிதவிக்கும் மக்கள்

விபத்துக்கு வித்திடும் மின்கம்பங்கள்...கழிவு நீர்கசிவு கொடை 19வது வார்டில் பரிதவிக்கும் மக்கள்

கொடைக்கானல்; முறையாக கட்டமைக்கப்படாத சாக்கடைகள்,சுகாதாரக்கேடான குடிநீர் கிணறுகள்,விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம் உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளுடன் கொடைக்கானல் நகராட்சி 19வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.கொடைக்கானல் நகரின் மையத்தில் உள்ளது அண்ணா நகர் 19 வது வார்டு. இங்குள்ள 1 முதல் 4 தெருக்களில் சரிவர கட்டமைக்கப்படாத சாக்கடையால் குடியிருப்புகளில் கழிவு நீர்க்கசிவால் மக்கள் பரிதவிக்கின்றனர். சுகாதாரக் கேட்டுடன் காணப்படும் குடிநீர் கிணறால் நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகின்றனர். விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தால் அவதி, அடிக்கடி மின்தடையால் பரிதவிப்பு, ரேஷன் பொருள் தட்டுப்பாடு, பட்டா இல்லாத அவலம், தெரு நாய்களால் தொல்லை .இது வேறு காட்டு மாடுகள் பிரச்னை, போதை வஸ்துக்கள் புழக்கத்தால் முகம் சுளிக்கும் குடியிருப்புவாசிகள் என ஏராளமான பிரச்னைகளுடன் மக்கள் தவிக்கின்றனர்.

விபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம்

பால்ராஜ்,தனியார் நிறுவன பணியாளர்: அண்ணா நகர் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் மின்கம்பம் உள்ளது. இதில் சிதலமடைந்த மின் ஒயர்களால் விபத்து அபாயம் உள்ளது. சாக்கடைகள் சேதமடைந்து கழிவு நீர் குடியிருப்பு வீடுகளுக்குள் புகுவதால் அவதி அடையும் நிலை உள்ளது. இங்குள்ள குடிநீர் கிணறு பராமரிக்கப்படாமல் சாக்கடை கழிவு நீர் கலந்தும்,குப்பை குவிந்து சுகாதாரக்கேடாக உள்ளது. வறட்சி காலத்தில் இப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக உள்ள கிணற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் ஸ்டாக் இல்லை என தெரிவிப்பதால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.

தேவை கண்காணிப்பு கேமரா

முனியாண்டி மோகன், பெயின்டர்: அண்ணா நகர் பகுதியில் சமுதாய கூடத்தை ஒட்டி தனிநபர் கழிப்பறை கட்டியும் அதில் செப்டிக் டேங்க் இல்லாமல் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதன் கழிவுகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் செல்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள தனியார் விடுதியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாமல் இதிலிருந்து வெளியாகும் பாதிப்பு இங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறை ஏற்படுத்துகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. வார்டில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும்.

மின்தடை ஏற்படுகிறது

சவுந்தர்ராஜ், கூலித் தொழிலாளி: அண்ணாநகர் 4 வது தெருவில் வசிப்பவர்களுக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இங்குள்ள 20க்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு ஒரே பொது குடிநீர் குழாய் இணைப்பு மட்டுமே உள்ளது. காட்டுமாடு பிரச்னையால் அவதியடையும் நிலையும் உள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தால் துர்நாற்றம் வீசுவதால் இங்கு வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

சித்ராபாண்டி, கவுன்சிலர், ( தி.மு.க.,) : ரூ.60 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த சாக்கடைகளை சீரமைக்க வரும் நிதி ஆண்டில் நகராட்சி நிதி ஒதுக்குவதாக கூறினர். பட்டா இல்லாதவர்களுக்கு வரி விதிக்கவும், அடங்கலில் ஏற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் வார்டில் உள்ள மக்கள் அவதிப்படுவது பல ஆண்டாக உள்ளது. இருந்த போதும் இதை அப்புறப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய், காட்டுமாடு பிரச்னை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. சமூக விரோத செயல்களால் இங்குள்ளோர் அவதிப்படும் நிலையை அடுத்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி