40 இடங்களில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் : புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.மருத்துவக்கல்லுாரி அரசுத்துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், கருவூல அலுவலகம், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி, அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உட்பட மாவட்டத்தில் 40-க்கு மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சங்க வட்டக்கிளை துணை தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லலுாரி வளாகத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பழநி: கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், வி.ஏ.ஓக்கள் பங்கேற்றனர்.