| ADDED : ஜன 26, 2024 05:53 AM
திண்டுக்கல்: ''ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாடுகள் சரியில்லை'' என, திண்டுக்கல்லில் நடந்த சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மாவட்ட அளவிலான சுகாதார பேரவைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சுகாதாரத் துறை துணை இயக்குநர் வரதராஜன் தலைமை வகித்தார். நலப் பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளாட்சித் தலைவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.ஸ்ரீராமபுரம் பேரூராட்சிப் பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாமதமாகத்தான் பணிக்கு வருகிறார்கள் . தாய் சேய் நல மையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இறப்பு சான்றிதழ் பெறுவதில் பொதுமக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். இயற்கையான மரணங்களைக் கூட சான்றிதழ் இல்லாமல் பேரூராட்சி செயலர் பதிவு செய்ய மறுக்கிறார். கன்னிவாடி மருத்துவமனையில் நோயாளிகளின் நலன் கருதி நவீன எக்ஸ்ரே கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .சிறுமலை மக்கள் மருத்துவ வசதிக்காக 30 கி.மீட்டர் பயணிக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஊராட்சி சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம், வட்டார பேரவைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்தனர்.