உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  துன்புறும் மக்களோடு இருக்கிறார் இயேசு

 துன்புறும் மக்களோடு இருக்கிறார் இயேசு

அனைவருக்கும் இயேசுவின் பிறப்பு பெருவிழா வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகிறேன். இயேசு பிறப்பின் 2025 ம் ஆண்டு யூபிலி விழா அனைவருக்கும் மகிழ்ச்சியையும் அருளையும் தரக்கூடியது. இந்த ஆண்டு யூபிலி ஆண்டை நாம் கொண்டாடி வருகிறோம். யூபிலி ஆண்டு என்பது பழைய ஏற்பாட்டு விவிலிய ஆதாரத்தை கொண்டது. தற்போது 50 வது யூபிலி ஆண்டை கொண்டாடி வருகிறோம். யூபிலி என்றால் மகிழ்ச்சி. இதை ஆங்கிலத்தில் ஜூபிலி, லத்தினில் ஜூபிலேயும் என அழைக்கின்றனர். வரலாற்றில் முதல் முறையாக கி.பி., 1300 ல் திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் இந்த யூபிலி ஆண்டை ஆரம்பித்து வைத்தார். ஒவ்வொரு நுாறாவது ஆண்டும் யூபிலி ஆண்டை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் 1350 ல் 50 ஆண்டுக்கு ஒரு முறை இந்த விழா கொண்டாடப்பட வேண்டும் என ஆறாம் திருத்தந்தை கிளமெண்ட் கேட்டு கொண்டார். 1475 முதல் 25 ஆண்டுக்கு ஒரு முறை இந்த விழாவை கொண்டாட வேண்டும் என திருத்தந்தை ஆறாம் பயஸ் கேட்டு கொண்டார். ஒவ்வொரு 25 வது ஆண்டும் நாம்முடைய மீட்பின் தொடக்கத்தை நாம் நினைவு கூர்கிறோம். எனவே 2025 ல் நாம் யூபிலி ஆண்டை கொண்டாடுகிறோம். கி.பி., 2000 ஐ மாபெரும் யூபிலி ஆண்டாக கொண்டாடினோம். இயேசுவின் பிறப்பு எளிமையான உள்ளத்துடன் இருக்கக்கூடிய அனைவருக்கும் சொந்தமானது. 2025 ஆண்டுகளுக்கு முன்னே மாட்டுக்குடிலில் பிறந்த இயேசு இன்று நமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்க வேண்டும். அவர் எளிமையான உள்ளம் கொண்டவர்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் பிறப்பார். மிடுக்கான மற்றும் மிகவும் அழகுபடுத்தப்பட்ட இடங்களிலும், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்ட நிலையில் உள்ளோரை கண்டுக்கொள்ளாத எந்தவொரு உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசுவின் பிறப்பு நிகழாது. அனைத்தையும் படைத்து பராமரித்து பாதுகாக்கும் கடவுள் தமது அன்பின் அடையாளமாய் தனது மகனை இவ்வுலகிற்கிற்கு அனுப்பினார். அவர் துன்புறும் மக்களோடு இருக்கிறார். போர், வன்முறை, கலவரம், பஞ்சம், பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், ஆபத்துகள், விபத்துகள் என சமூகத்தில் நடக்கும் பல்வேறு தீமைகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரோடும் இயேசு இம்மானுவேலாக உடனிருக்கிறார். தளர்ந்த நெஞ்சத்திற்கு துணையாக பிறக்கிறார். நமக்கு துணையாக இருக்கும் ஆண்டவரின் பிறப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தரட்டும். அன்று இயேசுவின் பிறப்பு அதை எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தது போல இன்று அனைவருக்கும் இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருவதாக. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு மற்றும் ஆங்கில புத்தாண்டு 2026 நல்வாழ்த்துகள்... - பி.தாமஸ் பால்சாமி, பிஷப் திண்டுக்கல் மறை மாவட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி