உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக இருப்பது தண்ணீர். இதன் மகத்துவத்தை உணர்த்தி பசுமை சூழலால் சுற்றுப்புறத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், சுற்றுச்சூழல் மன்ற மழலையர் தனித்துவம் காட்டி வருகின்றனர். சமீபத்திய தலையாய பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாடு. மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை. இதற்கு, மனித செயல்களும் முக்கிய காரணம். மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், பாலிதீன் எரிப்பு, மக்கா கழிவுகள், அதிகரிக்கும் வாகன புகை போன்றவற்றால், காற்று, நீர், வான், நிலத்தை மாசுபடுத்தி வருகிறோம். நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. மாவட்டத்தின் பல்வேறு தனியார் அமைப்புகள், பசுமையை வளப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. சித்தையன்கோட்டை அருகே , சேடபட்டி அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் கொண்ட சுற்றுச்சூழல் மன்ற (இகோ கிளப்) குழு, மரக்கன்றுகளின் மகத்துவத்தை கூறும் விழாக்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் முனைப்பில் பல்வேறு பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இப்பணியில் அரசு பள்ளியாக இருந்தபோதிலும், தனியார் அமைப்புகளுக்கு இணையாக ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் சொந்த முயற்சி மட்டுமின்றி, சொந்த செலவிலும் இதற்கான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி வளாகம், கண்மாய், வாய்க்கால்கள் போன்ற நீர் நிலைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இந்த அமைப்பு நடவு செய்துள்ளது. அவற்றை பராமரித்து வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. --முயற்சி அவசியம் ஜி.பாலமுருகன், தலைமை ஆசிரியர், சேடபட்டி அரசு துவக்கப்பள்ளி : பள்ளி வளாகத்தின் உள்ளே மரம் செடி கொடிகள் வளர்ப்பதற்கும் காய்கறி தோட்டம் அமைப்பதற்கும் இடவசதியுடன், தண்ணீர் வசதியும் உள்ளது. பூவரசு, மருதம், வேம்பு, புங்கன், கொய்யா, நாவல் போன்ற மர வகைகளை வளர்த்து வருகிறோம். வேப்ப மரத்தில் கிடைக்கும் விதைகளை சேகரித்து, விதைப்பந்து நாற்று தயாரிப்பிற்கு பயன்படுத்துகிறோம். சுற்றுச்சூழலை மையப்படுத்தி இயங்கும் தன்னார்வ குழுக்களான செம்பட்டி பசுமை குறள், நீர்நிலைகள் காப்போம் ஆகியவற்றின் உதவியுடன் சுற்றுச்சூழல் சார்ந்த விழாக்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய தினங்களிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள், பசுமை பராமரிப்பு குறித்த புத்தகங்கள், மரக்கன்றுகள், மஞ்சப்பை வழங்குதல் பணிகளை மேற்கொள்கிறோம். பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்திற்கு பொதுமக்களையும் ஊக்கப்படுத்தி வருகிறோம். வீ ட்டில் காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு, மரக்கன்றுகளும் வழங்கி வழிகாட்டி வருகிறோம். --அறிவும், ஆர்வமும் அதிகரிப்பு புவனேஸ்வரி, ஒருங்கிணைப்பு ஆசிரியர், சுற்றுச்சூழல் மன்றம்: அரசு பள்ளிகளில் உள்ள மகிழ் முற்றத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற குழுக்களை உள்ளடக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றையும் ஒருங்கிணைத்து, இக்குழுவில் உள்ள மாணவர்கள் சுழற்சி முறையில் ஆர்வத்துடன் மரங்கள் வளர்ப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மரக்கன்று நடவு மட்டுமின்றி தண்ணீர் பாய்ச்சுதல், சில மூலிகைச் செடிகளை நட்டு வளர்த்தல் என்பதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இவை தவிர மூலிகைகள் நமக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது, எந்த பிரச்னைகளுக்கு எந்த மூலிகையை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த நுட்பங்களையும் கற்பித்து வருகிறோம். இதன் மூலம் மாணவர்களின் இயற்கை சார்ந்த அறிவும், ஆர்வமும் அதிகரித்து வருகிறது, என்றார்.