| ADDED : ஜூலை 24, 2011 09:09 PM
தாண்டிக்குடி : கொடைக்கானல் மலைப்பகுதியில் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி மது அருந்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கவேண்டியதுள்ளது. இதை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கொடைக்கானலுக்கு செல்ல வத்தலக்குண்டு, பழநி ஆகிய இருவழித்தடங்கள் உள்ளன. இந்த இரு வழித்தடத்திலும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்றுவருகின்றன. சிலர் வாகனத்தை ரோட்டோரம் நிறுத்திவிட்டு அடர்ந்த வனப்பகுதி மற்றும் ரோட்டோர தடுப்புச்சுவர்களில் அமர்ந்து மது அருந்தும் நிலை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
பகல் நேரங்களில் திறந்தவெளி பாராக ரோட்டோரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால், குடும்பத்துடன் கொடைக்கானல் செல்பவர்கள் முகம் சுழிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு குடிமகன்களை கட்டுப்படுத்த வனத்துறை ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்த தடைவிதித்தது. போலீசார் எச்சரித்தும், வழக்குப்பதிவு செய்தும் வந்தனர். இதன் காரணமாக இத்தகைய செயல்கள் குறைந்திருந்தது. சமீபகாலமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தற்போது எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, சகஜமாக ரோட்டோரம் மது அருந்தி தகாத செயல்கள் அரங்கேறி வருவது தொடர்கிறது.
வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து ரோட்டோர குடிமகன்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். ரோட்டோரங்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஆய்வு செய்து, குற்ற செயல்களை தடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.