கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தேங்கும் கழிவுநீர், கொசுத்தொல்லை, குடிநீர், தெருவிளக்கு பிரச்னைகள் என அடிப்படை வசதிகளுக்காக மக்கள் அவதிப்படுகின்றனர்.புளியராஜக்காபட்டி, குஞ்சனம்பட்டி, பெரியார் நகர், அன்னைநகர், முத்தனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, காலாடிபட்டி, மைலாப்பூர், ஆவரம்பட்டி உட்பட 10க்கு மேற்பட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்தபோதும் அடிப்படை வசதிகளில் பின்னடைவு நீடிக்கிறது. குடிநீர் வினியோகம், சாக்கடை வசதிகள் போதுமானதாக இல்லை. தெருக்கள்தோறும் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு, தொற்று நோய் பாதிப்பு உள்ளது. புளியராஜக்காபட்டி, குஞ்சனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, காலாடிபட்டி, நாச்சக்கோணான்பட்டி, புஷ்பபுரம் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது. சாக்கடைகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர்,கழிவுநீருடன் வீடுகளை சூழ்ந்து நிற்கும் அவல நிலை பல மாதங்களாக தொடர்கிறது. மயானங்களில் அடிப்படை வசதிகள், அவற்றுக்கான ரோடு, ஆக்கிரமிப்புகள், எரியாத தெருவிளக்கு என திட்ட பணிகளில் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை, மகளிர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக உறவினர்கள் அதிகாரம் காட்டுதல் என குவியும் புகார்களுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். --ஊக்குவிக்கும் அதிகாரிகள்
ஐயப்பன்,பா.ஜ., ஒன்றிய செயலாளர், ரெட்டியார்சத்திரம் : உள்ளாட்சி பிரதிநிதியாக மகளிர் தேர்வு செய்யப்பட்ட போதும் உறவினர்களே நேரடி அதிகாரம் செலுத்துகின்றனர். புகார்கள் தொடர்ந்தபோதும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி ஊக்குவிக்கின்றனர். ஊராட்சி அலுவலகம் பகுதியில் சுகாதாரம் படுமோசமாக உள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம். அவசர காலங்களில் மருத்துவ வசதி தேவைக்கு செல்ல முடியாத அளவில் ரோடு, தெருக்கள் குறுகியுள்ளன. ஒன்றரை ஆண்டுகளாக 'உவ்வே'
பாண்டியராஜன்,விவசாயி,, புளியராஜக்காபட்டி : ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள், ஊராட்சி முழுவதும் காட்சி பொருளாக பயன்பாடின்றி கிடக்கின்றன. குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி, குஞ்சனம்பட்டி, அன்னைநகர், காலாடிபட்டி, புளியராஜக்காபட்டியில் உள்ள தெரு குழாய்களை சுற்றிலும் கழிவுநீர் வெளியேற வழியின்றி பாசி படர்ந்த நிலையில் நோய்க்கிருமிகளின் புகலிடமாக மாறியுள்ளது. புளியராஜக்காபட்டியில் சாக்கடை முழுவதும் மண் மேவியுள்ளது. அசுத்த நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. ஆமை வேகத்தில் பணி
ராஜேந்திரன் ,கூலித்தொழிலாளி, புளியராஜக்காபட்டி : காலாடிபட்டி-புளியராஜக்காபட்டி ரோடு சீரமைப்பு துவக்கி பல வாரங்களாக ஆமை வேகத்தில் நடக்கிறது.இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர். குழந்தைகள் தொற்று பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.சாக்கடை தேங்கிய சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. வீடு தோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் செயல்பாட்டில் இல்லை. தனியாருக்கு தாரை வார்ப்பு
கணேசமூர்த்தி,கிராம முக்கியஸ்தர், முத்தனம்பட்டி : முத்தனம்பட்டி மேட்டுக்கடை பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. முத்தனம்பட்டி, காலனி பகுதியில் குடிநீர், சாக்கடை வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். பெரும்பகுதியை தவிர்த்து குறுக்கே தடுப்புச்சுவராக சுற்றுச்சுவர் கட்டி தனியாருக்கு தாரை வார்த்து விட்டனர். கோயில் இடத்தில் ரேஷன் கடைக்கு கட்டடம் எழுப்புகின்றனர். ஒன்றிய நிர்வாகம் ஒத்துழைப்பு
சுமதி ,ஒன்றிய கவுன்சிலர், குட்டத்துப்பட்டி :ஒன்றிய கவுன்சில் மூலம் முடிந்தளவு திட்டப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கேற்ப ஒன்றிய நிர்வாகம் திட்டப் பணி ஒதுக்கீட்டில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. சுகாதாரப் பணிகளில் கொசு ஒழிப்பு, மஸ்துார் பணிகள், ஒன்றிய கவுன்சில் மூலம் நிதி வழங்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. துரித தீர்வு
வேல்கனி .தலைவர், குட்டத்துப்பட்டி ஊராட்சி : குடிநீர் வழங்கல் பணி பிரச்னைகளுக்கு துரித தீர்வு காணப்படும். சுகாதாரம் சார்ந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் தொடர்பான புகார் தொடர்பாக அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.--