எழுத்தாளராக மாற வாழ்க்கை அனுபவம் போதுமானது
திண்டுக்கல்: ''எழுத்தாளராக மாறுவதற்கு பள்ளிக்கல்வியோ, படிப்போ பெரிய அளவுக்கு தேவையில்லை. வாழ்க்கை அனுபவங்களே போதுமானது'' என சல்மா எம்.பி., பேசினார். திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் நடந்து வரும் புத்தக திருவிழா 6ம் நாள் விழா சிந்தனையரங்கம் நிகழ்ச்சியில் வாழ்க்கையும் இலக்கியமும் எனும் தலைப்பில் அவர் பேசியதாவது : புத்தக கண்காட்சி அதிகம் நடைபெறும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு சமூகம் வளர்ச்சி அடைய கல்வி எந்தளவிற்கு அவசியம் என்பதை உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு. 47 சதவீத பெண்கள் கல்வி கற்றவர்கள் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் உள்ளனர். மாறிவரும் சமூக மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கனவுகளையும் அதை நிறைவேற்றிக் கொள்ளும் சிறகுகளையும் புத்தகங்கள் தரும். எழுத்தாளராக மாறுவதற்கு பள்ளிக்கல்வியோ, படிப்போ பெரிய அளவுக்கு தேவையில்லை. வாழ்க்கை அனுபவங்களே போதுமானது. கேரள மாநிலத்தில் எழுத்தாளர்களை மிகவும் கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை கொண்டாட கூடிய நிலை இன்னும் இல்லை. தற்போது நிறைய புத்தகங்கள் புத்தக கண்காட்சியின் வாயிலாக வெளிவருகின்றன. எழுத்தாளர்களின் புத்தகங்கள் பள்ளி நுாலகங்களில் வரவேற்பு இருக்கிறது. இதை பார்க்கையில் எழுத்தாளர்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டிருக்கிறது. இந்த உலகத்தை பார்க்க முடியும் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியை அனிதா , திண்டுக்கல் இலக்கியக்களம் துணைத்தலைவர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.