| ADDED : ஜன 24, 2024 05:33 AM
செம்பட்டி : செம்பட்டி புல் வெட்டி கண்மாய் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்தில் லாரி மோதி சாய்ந்த விபத்தில் 20க்கு மேற்பட்ட வீடுகளில் மின் சாதன பொருட்கள் பழுதாகின.மேட்டூர்-ஒட்டன்சத்திரம் தடத்தில் புதிய நான்கு வழிச்சாலை பணி 2 ஆண்டுகளாக நடக்கிறது. செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் பகுதியில் நேற்று இப்பணிக்காக டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. லாரியை டிரைவர் பின்புறமாக வேகமாக நகர்த்தி உள்ளார். உயர் மின் கம்பத்தில் மோதியதில் லாரி,உயர் மின் கம்பம் சாய்ந்தது. மதுரை பசுமலையில் இருந்து செம்பட்டி மின் பகிர்மான தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது.இப்பகுதியில் உள்ள பச்சைமலையான்கோட்டை ஊராட்சி தலைவர் காளிதாஸ், ஜொதிமணி, முருகன், குணா, கிருஷ்ணமூர்த்தி உட்பட 20க்கு மேற்பட்டோர் வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகின. நான்கு வழிச்சாலை பணி பெருமளவு முடிந்து ஓரளவு வாகன போக்குவரத்து உள்ளது. இருப்பினும் சம்பவ நேரத்தில் வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.