வெயில், வரத்து குறைவால் விலை உயர்ந்த பன்னீர் திராட்சை கிலோ ரூ.150 வரை விற்பனை
திண்டுக்கல்:குறையாத வெயிலின் தாக்கம், வரத்து குறைவு காரணமாக பன்னீர் திராட்சை விலை சீசன் காலங்களை விட தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவார பகுதிகளான ஊத்துப்பட்டி, வெள்ளோடு, நரசிங்கபுரம், செட்டியபட்டி, பெருமாள்கோவில்பட்டி, சின்னாளபட்டி, அம்மையநாயக்கனுார், கோம்பை, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பன்னீர் திராட்சையை பிரதான விவசாயமாக செய்கின்றனர். இப்பகுதிகளில் விளையக்கூடிய பன்னீர் திராட்சை தோல் கடினத் தன்மையுடனும், சுவை மிகுந்துள்ளதோடு 10 நாட்களுக்குமேல் கெட்டுப்போகாத தன்மை கொண்டது.இத்திராட்சை மார்ச், ஏப்ரல், மே என கோடை காலங்களில் நல்ல விலைபோகும். ஆனால் நடப்பாண்டில் மாம்பழங்களின் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்ததால் பன்னீர் திராட்சையின் வரத்து அதிகரித்தும் விலை போகவில்லை. கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையானது. இதனால் பன்னீர் திராட்சை விவசாயிகள் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டமடைந்தனர்.தற்போது கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்தில் பன்னீர் திராட்சையின் வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் தேவை அதிகரித்துள்ளது. விலை இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.80 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் நஷ்டத்தில் இருந்த விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.