| ADDED : டிச 05, 2025 05:24 AM
கொரோனா பொது முடக்கத்திற்கு பின் கட்டட மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் இன்று வரை குறைந்த பாடில்லை. யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு செங்கல், சிமென்ட், எம் சான்ட், கட்டுமான கம்பி, ஜல்லி, பெயின்ட், எலக்ட்ரானிக் பொருட்கள் எனஅனைத்தும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 25 சதவீதம் முதல் 60 சத வீதம் வரை உயர்ந்துள்ளது. பொது முடக்கத்தை பயன்படுத்தி கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தப் பட்டுள்ளதாக கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களை சேர்ந்தோர் குற்றம் சாட்டுகின்றனர். 2021--22 ஆண்டுகளை ஒப்பிடுகையில் ஒரு செங்கல் ரூ.5 இருந்து ரூ.10,மணல் தட்டுப்பாடு உள்ளதால் 3 யூனிட் ரூ.24,000. எம் சான்ட் ரூ. 3000 இருந்து 6000, பி சான்ட் 7000, கட்டுமான கம்பி ஒரு டன் ரூ.65,000 லிருந்து ரூ.75,000, , பெயின்ட் லிட்டருக்கு ரூ.60 முதல் 100, ஒயர் ஒரு காயில் ரூ.600 இருந்து ரூ.1000 வரை அதிகரித்துள்ளது.இதேபோல் போர்வெல் அமைக்க அடிக்கு ரூ.60 லிருந்து ரூ.86 என்ற நிலை உள்ளது. இக்கடுமையான விலை உயர்வால் புதிதாக வீடு கட்டுவோரின் கனவை சிதைக்கும் நிலை உள்ளது. கட்டட தொழிலாளி கூலியும் ரூ.1100, சித்தாள் 550, உதவியாளர் ரூ.900 என கூலியாக்கள் சம்பளமும் கூடிய நிலையில் எலக்ட்ரானிக் பொருட்களும் பன் மடங்கு விலை உயர்ந்து வீடு கட்டுவோரை மூச்சு அடைக்க வைக்கிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் கட்டுமானதொழில் முடங்கும் நிலைக்கு தள்ளப்படும்.