உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் போதுமான வசதிகளின்றி தவிப்பு

பழநியில் பாதயாத்திரை பக்தர்கள் போதுமான வசதிகளின்றி தவிப்பு

திண்டுக்கல்:பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் போதுமான பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் பக்தர்கள் தவிக்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் பழநிக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் பார்க்கிங், பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்லும் வழிகள் சரியாக இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கிழக்கு கிரிவீதியில் உள்ள பெரிய பார்க்கிங், மேற்கு கிரிவீதியில் சிறிய அளவில் கோசாலா பார்க்கிங் உள்ளன. அங்குள்ள இடவசதியை விட பல மடங்கு வாகனங்கள் வருகின்றன. நிறுத்த இடமின்றி திருஆவின்குடி அருகே பாலசமுத்திரம் ரோடு, பெரிய பார்க்கிங்கிலிருந்து வெளியேறும் பகுதியான பைபாஸ் ரோடு என ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். உள்ளூர் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பக்தர்கள் பெரிதளவில் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.பக்தர்கள் ஆட்டோ, குதிரை வண்டிகள் வாயிலாக அடிவாரம் வருவர். தற்போது ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் பேரிகார்ட் போட்டு அடைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டியுள்ளது. இதற்கும் இலவச வாகனங்களை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்களின் வருகைக்கேற்ப நடமாடும் மருத்துவ வாகனங்களையும், ஆம்புலன்ஸ்களையும் அதிகப்படுத்த வேண்டும். தற்போதுள்ள குடிநீர், பார்க்கிங், கழிப்பறைகள் அனைத்துமே அதிகரிக்கும் பக்தர்களின் வருகைக்கேற்ப இல்லை. தைப்பூசத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தேவையான வசதிகளை உடனடியாக கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை