போக்குவரத்து மாற்றத்தால் சேதமான ரோடு
வேடசந்துார்: கோவிலுாரிலிருந்து பெருமாள் கோவில்பட்டி வழியாக வேடசந்துாருக்கான போக்குவரத்தை மாற்றியதால் 3 கி.மீ., தார் ரோடு சேதமடைந்துள்ளது. இதை புதுப்பித்து தர வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவிலுார் வேடசந்துார் மெயின் ரோட்டில் கோவிலுார் அருகே உள்ள திண்டுக்கல் கரூர் ரயில்வே லைனில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஓராண்டு கிடப்பில் போடப்பட்ட பணி தற்போது தான் துவக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் சென்ற அரசு, தனியார் பஸ்கள், கனரக லாரிகள் என அனைத்து வாகனங்களும், கோவிலுார் திண்டுக்கல் ரோட்டில் பிடாரியம்மன் கோவில் வரை சென்று பெருமாள் கோவில்பட்டி ரோட்டில் ஆர்.வி.எஸ்., நகர் அருகே வேடசந்துார் மெயின் ரோட்டில் இணைகிறது. இந்த ரோட்டில் தொடர் வாகனங்கள் சென்று வந்ததால் சிங்கிள் தார் ரோடு மெட்டல் ரோடாக, மேடு பள்ளங்களாக மாறிவிட்டது. இந்த வழித்தடத்தின் இரு புறங்களிலும் உள்ள கருவேல முட்களை வெட்டாமல் அப்படியே விட்டுள்ளதால் பஸ்சில் செல்லும் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து பஸ் போக்குவரத்தை நேரடியாக மாற்ற வேண்டும் என்ற நிலையில் சேதமடைந்த பெருமாள் கோவில்பட்டி தார் ரோட்டை விரைந்து புதுப்பித்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ரோடை புதுப்பிக்கலாமே சி.ஆர். பாலாஜி, அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர், வேடசந்துார்: பெருமாள் கோவில்பட்டி தார் ரோடு அ.தி.மு.க., ஆட்சியில் தான் புதிதாக போடப்பட்டது. கோவிலுார் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்காக போக்குவரத்து இந்த வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளும் முடிவு பெறவில்லை. மாற்றி விடப்பட்ட ரோடும் மெட்டல் ரோடாக மாறிவிட்டது. மாவட்ட நிர்வாகம் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை நேர்வழியில் விட வேண்டும். சிதிலமடைந்த ரோடை விரைந்து புதுப்பித்து தர வேண்டும். பயனற்றதாகி விட்டது சி.மோகன்ராஜ், பா.ஜ., நிர்வாகி, ராமநாதபுரம்: கோவிலுார் ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை துவக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்ட பெருமாள் கோவில்பட்டி தார் ரோடு மெட்டல் ரோடாக மாறிவிட்டது. இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் ரோடு போக்குவரத்து மாற்றத்தால் பெருமாள் கோவில்பட்டி ரோடு மேலும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு பயனற்றதாகி விட்டது. விரைவில் மழை காலம் வர உள்ள நிலையில் ரோடை விரைந்து புதுப்பித்து தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.