உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முறையாக இல்லை சாலை; நாய்களால் விபத்து சிரமத்தில் பழநி 25வது வார்டு மக்கள்

முறையாக இல்லை சாலை; நாய்களால் விபத்து சிரமத்தில் பழநி 25வது வார்டு மக்கள்

பழநி: முறையாக இல்லை சாலை, நாய்களால் விபத்து என பழநி நகராட்சி 25வது வார்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.சூலை மேட்டுதெரு,மாற்றான் தம்புரான் தோட்டம், கோட்டை மெட்டு தெரு, அன்சாரி தெரு எருமை கார தெரு, காமராஜர் வீதி, காந்தி மார்க்கெட் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் , பட்டத்து விநாயகர் கோயில் ரோடு வையாபுரி குளத்திற்கு மிக அருகில் உள்ளது. காந்தி மார்க்கெட், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிகளவில் இப்பகுதியை பயன்படுத்துகின்றனர். இது போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி ஆகும். படிப்பாரை காளியம்மன் கோயில் அருகே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. பழநி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இங்கு அதிக நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் குளத்து ரோடு காமராஜர் வீதியை இணைக்கும் வகையில் வையாபுரி குளத்தில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். இதன் மூலம் ஆம்புலன்ஸ் வந்து செல்வது எளிதாக இருக்கும். 25வது வார்டில் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் இப்பகுதியில் நடமாட அச்சப்படுகின்றனர். தெரு நாய்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதும், குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதாலும் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது.

நாய் தொல்லை அதிகம்

அப்துல்ரஹிம்,வியாபாரி,காமராஜ் வீதி: வார்டில் உப்பு தண்ணீர் முறையாக வராமல் உள்ளது. இதனால் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறோம். நாய் தொல்லை அதிகம் உள்ளது .பட்டத்து விநாயகர் சாலையை சரி செய்ய வேண்டும். காமராஜர் வீதியில் உள்ள சாக்கடையை தூர்வார வேண்டும்.

கேமராக்களை அதிகரியுங்க

காமராஜ், டெய்லர், கோட்டை மேட்டு தெரு: காந்தி ரோடு பட்டத்து விநாயகர் கோயில் ரோடு பகுதியில் உள்ள ரவுண்டானா சேதமடைந்து நகரின் அழகை கெடுக்கும் வகையில் உள்ளது. பட்டத்து விநாயகர் கோயிலிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையம் வரும் சாலை சேதமடைந்துள்ளது. தற்போது அதிக அளவில் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க வேண்டும்.

பாலத்துடன் சாலை

முகமது உசேன்,தையல் மிஷின் சர்வீஸ் , காமராஜ் வீதி :குளத்து ரோடு பகுதியில் இருந்து வையாபுரி குளத்தின் வழியாக பாலம் அமைத்து சாலை அமைக்க வேண்டும். இதனால் வயதானவர்கள் சுகாதார மையத்திற்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்று வர எளிதாக இருக்கும்.

ரவுண்டானா அமைக்க நடவடிக்கை

ஜென்னத்துல் பிர்தோஸ் , கவுன்சிலர் (அ.தி.மு.க.) : குளத்து ரோடு பகுதியில் இருந்து குளத்தின் வழியாக பாலம் அமைத்து தர நகராட்சியில் தெரிவித்து உள்ளேன். பட்டத்து விநாயகர் கோயில் அருகே ரவுண்டானா அமைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பேன். நாய் தொல்லை குறித்து விரைவில் தீர்வு காணப்படும். சாலைகளை அமைக்காமல் நகராட்சி நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. உப்பு தண்ணீர் போர்வெல் பம்புகளை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ