கண்டிப்பு பட்டாசு விபத்துக்களை தவிர்க்க போலீசார்... விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுரை
நிலக்கோட்டை : தீபாவளி பண்டிகை அக்.20ல் வர இருப்பதால் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் தற்காலிக பட்டாசு விற்பனையாளர்களுக்குரிய அடிப்படை கட்டமைப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடை வைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் 2,3 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்று நிரந்தரமாக சொந்த கட்டடத்தில் நடத்தி வருகின்றனர். நிரந்தர லைசென்ஸ் பெற்ற கடைகளிலும் தீபாவளியை முன்னிட்டு போலீசார், வருவாய், தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்வது வழக்கம். தற்காலிகமாக கடை வைப்பவர்களுக்கு போலீசார், தீயணைப்புத் துறையினர் நிரந்தரமாக கடைபிடிக்க வேண்டிய அடிப்படை கட்டமைப்புகளை பின்பற்ற வேண்டும் என கூறி உள்ளனர். பட்டாசு கடை 250 சதுர அடி முதல் தேவைக்கேற்ப அமைக்கலாம். பள்ளி, கோயில், மருத்துவமனைகள் அருகே பட்டாசு கடைகள் அமைக்ககூடாது. டிரான்ஸ்பார்மர்கள், மின் ஒயர் அருகே கடை வைக்கக் கூடாது. மக்கள் அதிகமாக கூடும் நெருக்கடி மிகுந்த இடங்களில் கடைகள் வைக்க அனுமதி இல்லை. பட்டாசு கடைக்குள் மின்ஒயர்கள் பிளாஸ்டிக் பைப்பிற்குள் இருக்க வேண்டும். வெளியே தெரியகூடாது. எவ்வித டேப்களைக் கொண்டும் மின் ஒயரினை ஒட்ட அனுமதி இல்லை. பட்டா சு விற்பவர்கள் கடையில் இரண்டு பெரிய வாளிகளில் தண்ணீர் நிரப்பி கடை அருகே வைத்து இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகளும் வைத்திருக்க வேண்டும். இதோடு பட்டாசு வாங்குபவர்களுக்கு பாதுகாப்பாக வெடிப்பது குறித்து விளக்க வேண்டும்.மேற்கண்ட விதிமுறைகளை கட்டாயம் தற்காலிக பட்டாசு விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என போலீஸ் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.