| ADDED : ஜூலை 26, 2024 12:24 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் டீ கடைகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட் கடைகள், பேக்கரிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெய்களில் தயாரிக்கப்படும் வடை, பஜ்ஜி,போண்டா, சிக்கன், மட்டன், மீன் வகைகளை வாங்கி சாப்பிடுபவர்கள் பாதிப்பது தொடர்கிறது. பயன்படுத்திய சமையல் எண்ணெய் உடன் புதிய எண்ணெயை கலந்து பயன்படுத்துவது பெரிய சுகாதார ஆபத்து என கண்டறியப்பட்டுள்ளது. எண்ணெயை சூடாக்கி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய பாதிப்பு, நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம் , கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் வராமல் இருக்க ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இவ்வாறு செய்யப்படும் உணவுப் பொருட்கள் பல கடைககளில் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஈக்கள் மொய்க்கும் இவற்றை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது. இதனை உணவுத்துறை அதிகாரிகள் அடிக்கடி பலகாரங்களின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.