மேலும் செய்திகள்
அஷ்டமி வழிபாடு
25-Oct-2024
திண்டுக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி செய்திருந்தார்.திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயிலில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. தேங்காய், வெள்ளைப் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.ரெட்டியார்சத்திரம் : கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.-*கொடைக்கானல் பத்ர காளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. இங்குள்ள கால பைரவருக்கு அபிஷேகம், தீபாராதனை , பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
25-Oct-2024