உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைதீர் கூட்டத்தை மனு கொடுக்கும் முகாமாக மாற்றுங்க கொந்தளித்த விவசாயிகள், பதில் சொல்ல முடியாமல் தவித்த அதிகாரிகள்

குறைதீர் கூட்டத்தை மனு கொடுக்கும் முகாமாக மாற்றுங்க கொந்தளித்த விவசாயிகள், பதில் சொல்ல முடியாமல் தவித்த அதிகாரிகள்

திண்டுக்கல், : 'விவசாயிகள் குறைதீர் கூட்டத்தால் எந்த தீர்வும் கிடைக்கபெறாததால் இதை மனு கொடுக்கும் முகாமாக மாற்றுங்க' என விவசாயிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்கள் பெருமாள்சாமி, காயத்ரி கலந்து கொண்டனர்.விவசாயிகள் விவாதம்: காசி மாயன் (விவசாயிகள் சங்க நிர்வாகி) : நிலக்கோட்டை, சிறுநாயக்கன்பட்டியில் இதுவரை நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. அறுவடை செய்யப்பட்ட நெல் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.2021ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் விவசாய மின் இணைப்புக்கான ஆணை பெற்ற விவசாயிக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. டீசல் இன்ஜினை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை தொடர்கிறது. பாத்திமா ராஜரத்தினம் (தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதி): ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம், குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 வீதம் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. ஒரு கிலோ நெல் ரூ.23 க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் ஒரு கிலோ தவிடு ரூ.40, கடலை புண்ணாக்கு ரூ.90 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.காந்திமதி (ஆர்.கோம்பை): 6 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அதே பகுதியைச் சேர்ந்த பிரமுகர் மோசடியாக அவரது பெயருக்கு மாற்றிவிட்டார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்க வேண்டும்.தங்கவேல் (புங்கம்பாடி): காட்டு மாடுகளால் 3 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சீர் குலைந்து விட்டன. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.ராமசாமி (கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவர்): விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண்பதில்லை.மனுவை முடித்து வைப்பதற்காக அவ்வப்போது ஒரு பதிலை மட்டுமே சொல்லி கூட்டத்தை கடத்துகின்றரே தவிர, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில்லை. வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அரசியல் கட்சியினருக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. விவசாயிகளை அழைக்கவில்லை.கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமித்து தனியார் ஆலை கட்டடத்தை கட்டி உள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆற்றில் மண் எடுப்பதாக ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட புகார்களையும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லாததால் குறைதீர் கூட்டம் என்பதற்கு பதிலாக, இனி மனு வாங்கும் முகாமாக மாற்றிவிடலாம்.தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அடுக்கிக் கொண்டிருக்க அதிகாரிகள் தரப்பில் பதில் அளிக்க முடியாமல் திணறினர். அரங்கமே அமைதியாகி விட்டது. விவசாயிகளோ கைதட்டி தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ